Thursday, October 28, 2010

விளையாட்டு இரசனைக்கானதா?


டில்லியில் 19-வது காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்தாலும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால்  ஊழல் முறைகேடுகள் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டில் எனக்கு ஈடுபாடு இருப்பதால் பொதுவாக விளையாட்டுப் போட்டிகளை கூர்ந்து கவனிப்பது வழக்கம். அதன்படி காமன்வெல்த் போட்டிகளில் ஒரு பகுதியான மகளிர் டென்னிஸ் போட்டியில் ரோடியோனோவை வென்று சானியா மிர்சா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தை நழுவவிட்டார். இந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும், சானியா ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் ஒரு வித "தேசப் பற்று" இழையோடியதை மறுப்பதற்கில்லை. விளையாட்டிலும் தேசப்பற்று தேவைதானா என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

விளையாட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமேற்றுகிறது. நோய் வராமல் தடுக்கவும்,  நோயுற்றவர்களை நலப்படுத்தவும், வாழ்நாளை நீட்டிக்கவும், உடல் வலியின்றி வாழவும் விளையாட்டும் உடற் பயிற்சியும் உதவுகிறது. 

உழைப்பு மட்டுமே உடலுக்கு வலு சேர்க்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சித்தாள், கொத்தனார் உள்ளிட்ட உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்களின் உழைப்பின் மூலமே உடலுக்கு வலு சேர்த்துக் கொள்கின்றனர். உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட மூளை உழைப்பாளிகளுக்கு ஒப்பீட்டளவில் நோய் வர வாப்புள்ளது. எனவே உடற்பயிற்சியும் விளையாட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது.

கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி உள்ளிட்ட சில குழு விளயாட்டுகளில் உள்ளத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தனிநபர் விளையாட்டைவிட குழு விளயாட்டுகளில் கூடுதலான பயிற்சி உள்ளத்திற்கு கிடைக்கிறது. இலக்கை அடைவதற்கு சிந்தனையை சிதறவிடாமலும், அணியின் பிற வீரர்களைப் பயன் படுத்தும் கூட்டுழைப்பின் (team work) அவசியத்தையும் பயிற்றுவிக்கிறது. ஆயிரம் நாட்கள் தியானப்பயிற்சி செய்தாலும் கிடைக்காத மனதை-சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது விளையாட்டு. 

விளையாட்டைப் பார்ப்பதென்பது அதன் நுணுக்கங்களை அறிந்து எது தமக்கு ஏற்ற விளையாட்டோ அதைத் தெரிவு செய்து விளையாடுவதன் மூலம் ஒருவர் தனது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக இருக்க வேண்டும். 

விளையாட்டில் பிரபலமானால் 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், அரசு வேலையோ அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையோ கிடைக்கும், அதிகமாகப் பிரபலமாகி விட்டால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்து மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. அணியில் இடம் பிடிக்க முறைகேடுகள் செய்வதற்கும் தயங்குவதில்லை. ஐ.பி.எல் போன்ற நிறுவனங்கள் விளையாட்டை வணிகமயமாக்கி வருகின்றன. விளையாட்டை இரசணைக்கானதாக மாற்றி வருகின்றனர்.

விளையாட்டில் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை. கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகன் சச்சினின் சத சாதனை-கிரிக்கெட்டில் வீசப்படுகிற ஒவ்வொரு பந்தும் எடுக்கிற ஒவ்வொரு ரன்னும் சாதனைதானே-உசைன் போல்ட்டின் ஓட்டப்பந்தய சாதனை, ஒரே நேரத்தில் 20 பேருடன் சதுரங்கம் ஆடும் ஆனந்தின் சாதனை, கால்பந்தாட்டத்தில் பீலேயின் சாதனை இப்படி சாதனைகளுக்குப் பஞ்சமேது. புகழ், பொருள் என்கிற சுயநலத்தை மட்டுமே வளர்க்கின்ற, பிற எதற்கும் பயன்படாத இது போன்ற சாதனைகளால் என்ன பயன்?

நாடுகளுக்கி்டையே போட்டிகள் நடைபெறும் பொழுது ஒருவித தேச வெறி திட்டமிட்டே வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்கு நம்மை அறியாமலேயே நம்மிடம் நிலவும் ஒருவித 'தேசப்பற்று' இடமளிக்கிறது. 

சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவோரை பாராட்டும் பக்குவமும் பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதில்லை. தனது நாட்டுக்காரன், மாநிலத்துக்காரன், மாவட்டத்துக்காரன், ஊர்க்காரன், மதத்துக்காரன், சாதிக்காரன், சொந்தக்காரன், நண்பன் வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது.

உள்ளத்திற்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் சாதனமாகத்தான் விளையாட்டைப் பார்க்க வேண்டும். பிறர் விளையாடுவதைப்பார்த்து நாமும் விளையாட்டில் பங்கேற்று நமது உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்ளவேண்டும். விளையாட்டு இரசனைக்கானதல்ல. அது உடல் நலத் தேவைக்கானது.

ஊரான்.