Tuesday, November 30, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா?

படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள். 

எட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.

ஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள். 

ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம். 

ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி   சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும்தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன. 

எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா? உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது? 

மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா?  சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இவற்றைப் பற்றி அலசலாமா?

தொடரும்.....

ஊரான்.

Tuesday, November 23, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-3

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?  உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும். இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள்-நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும். அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே! இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா? கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை  மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா? முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா! பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன? பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?


முற்றும்.

ஊரான்.





Monday, November 22, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-2

முகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும் போக்கவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அனால், இதுவே மாநாடுகள்- பேரணிகள் என்றால் அது விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காக திட்டித் தீர்ப்பார்கள்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி,  காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக் காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி,  எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது. புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம்  படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல்பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும், இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது. இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?


தொடரும்........




Saturday, November 20, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?

சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கனிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.

எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.

தொடரும்........

Wednesday, November 10, 2010

பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்சிக்குச் சென்றிருந்தேன். இனிமையான மாலைப் பொழுது. நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட பாட்டுக்கச்சேரி - அதாங்க 'ஆர்க்கெஸ்ட்ரா'-அரங்கையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. தாளமும் பாட்டும் தனித்தனி 'ட்ராக்குகளில்' ஓடிக்கொண்டிருந்தன. சுட்டுப் போட்டாலும் சுருதி சேராது போலும். பாடியவர்களும் ஈடுபாட்டோடு பாடவில்லை. கருவிகள் எழுப்பிய ஒலியோ அனைவரின் காதுகளையும் கிழித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இது போன்ற விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை பாட்டுக் கச்சேரிகள் தட்டிப் பறிக்கின்றன.

கிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளை இப்பாட்டுக் கச்சேரிகள் நம்மைப் பேசவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, அவை ஏற்படுத்தும் நாசகார ஒலி நமது காதுகளைக் கிழித்துத் தலைவலியை உண்டாக்குகின்றன. பாட்டுக் கச்சேரிகள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு 100 டெசிபெல்லுக்கும் மேலாகத்தான் இருக்கும். ஒலியின் அளவு 60 டெசிபெல்லுக்கு மேலே இருந்தால் நமது உடல் நலத்தை பாதிக்கும் என்பது மருத்துவ உலகம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள உண்மை. மெல்லிய காதுச் செவிப்பறைகளைச் சேதப்படுத்தும் இந்நாசகார ஒலி மூக்கு, தொண்டை உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் வெகுவாகப் பாதித்து உடல் நலிவை உண்டாக்குகிறது.

இசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கும் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்.

சரி, இசைக்கணக்குதான் சரியில்லை. ஏதாவது பயனுள்ள செய்தியாவது இக்கச்சேரிகள் மூலம் சொல்லப்பட்டால் கொஞ்சம் காது கிழிபடுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். திருமண வரவேற்பு மட்டுமல்ல; கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் 'ஆர்க்கெஸ்ட்ராக்களில்' அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் அறைக்கிறார்கள். மாவு அறைப்பவர்களும் (பாடுபவர்கள்) எந்திரங்களும்தான் (இசைக்கருவிகள்) வேறுபடுகின்றன. வேறென்ன சொல்ல.

ஊரான்.

Tuesday, November 2, 2010

எதார்த்தத்தை நோக்கி....

மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்தில்லாமல் யாரேனும் இவ்வுலகில் இருக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறுபட்ட கருத்து இருப்பதாலேயே கருத்து மோதல்கள், அதையடுத்து சண்டை- சச்சரவுகள் எற்படுகின்றன. எல்லா விசயங்களிலும் மாறுபட்ட கருத்து என்றால் எப்போழுதும் சண்டை- சச்சரவுகள் மோதல்கள்தான். கருத்தொற்றுமைக்கேற்ப சண்டை- சச்சரவுகள், மோதல்களின் அளவு குறையுமேயன்றி அவைகள் இல்லாமல் இருப்பதில்லை.

சமூக வாழ்க்கையில் ஒவ்வொறு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் கருத்து வேறுபாடுகள் நிரந்தரமானவைகளா? தீர்க்கவே முடியாதவைகளா?

கணவன்-மனைவி, பெற்றோர்கள்-பிள்ளைகள், மாமனார்/மாமியார்- மருமகள்/மருமகன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இப்படி குடும்ப உறவுகளுக்கிடையில் சண்டை- சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோரைக் காண்பது அரிது. 

நண்பர்கள், அலுவலக ஊழியர்கள், அக்கம் பக்கம் வாழ்வோர், சங்கங்கள், கட்சிகள், மன்றங்கள், உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள், போராளிகள் என பொதுவில் எல்லோர் மத்தியிலும் கருத்து முரண்பாடுகள் நிலவுவதைக் காணலாம். ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிப்போர் மத்தியிலும் இதைக் காணமுடியும். தான் சொல்வதே சரி என வாதிடும் குணம் பெரும்பாலும் மக்களிடையே காணப்படுகிறது. 

முரண்படுவதை ஒரு குற்றமாகப் பார்ப்பதா அல்லது அது அறியாமையின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்வதா? சாதாரண மக்களிடம் நிலவும் பல்வேறு வகையான மாறுபட்ட கருத்துக்கள் அவர்களின் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை. எனவே அறியாமையிலிருந்து விடுவிப்பது ஒன்றே ஒத்த கருத்துக்கு வழிவகுக்கும். 

ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் உணர்ந்ததனைத்தும், பேசுவதனைத்தும் உண்மையானவை, எதார்த்தமானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. (People not talk about the world, but about their perception). 

ஆங்கிலத்தில் delusion என்றொரு சொல் உண்டு. delusion என்றால் wrong perception of the reality என்று பொருள். அதாவது உள்ளதை உள்ளபடியே உணராமல் மருட்சியாக உணர்வதை திரிபுணர்வு என்று கூறலாம். இவ்வாறு உணர்வது ஆரோக்கியமான நிலை அல்ல. மாறாக உள்ளதை உள்ளபடியே அதாவது தெளிவாக (clarity) உணர்வதுதான் ஆரோக்கியமான நிலை.

எப்பொழுது அனைவரும் எதார்த்தத்தை, உண்மையை திரிபின்றி அறிகிறோமோ, உணர்கிறோமோ அப்பொழுதுதான் கருத்து வேறுபாடுகள் இருக்காது. கருத்து வேறுபாடுகள் நீடிப்பது வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தடையானதல்லவா; எனவே கருத்து வேறபாடுகளைக் களைய இடையராது முயல வேண்டும். 

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை எனும் வழிமுறைகளின் மூலம் முயன்றால் உண்மையை, எதார்த்தத்தைக் கண்டறிய முடியும். இயற்கை விதிகளின், மனித உறவுகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிலவாது. பூமி உருண்டை என்கிற இயற்கை விதியை இன்று யாரேனும் மறுக்க முடியுமா?  இது எப்படி சாத்தியமானதோ அதே போன்று அனைத்தையும் அறிய முயன்றால் எதார்த்தத்தை, உண்மையை எட்டுவது எளிது.


ஊரான்.