Wednesday, November 10, 2010

பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்சிக்குச் சென்றிருந்தேன். இனிமையான மாலைப் பொழுது. நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட பாட்டுக்கச்சேரி - அதாங்க 'ஆர்க்கெஸ்ட்ரா'-அரங்கையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. தாளமும் பாட்டும் தனித்தனி 'ட்ராக்குகளில்' ஓடிக்கொண்டிருந்தன. சுட்டுப் போட்டாலும் சுருதி சேராது போலும். பாடியவர்களும் ஈடுபாட்டோடு பாடவில்லை. கருவிகள் எழுப்பிய ஒலியோ அனைவரின் காதுகளையும் கிழித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இது போன்ற விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை பாட்டுக் கச்சேரிகள் தட்டிப் பறிக்கின்றன.

கிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளை இப்பாட்டுக் கச்சேரிகள் நம்மைப் பேசவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, அவை ஏற்படுத்தும் நாசகார ஒலி நமது காதுகளைக் கிழித்துத் தலைவலியை உண்டாக்குகின்றன. பாட்டுக் கச்சேரிகள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு 100 டெசிபெல்லுக்கும் மேலாகத்தான் இருக்கும். ஒலியின் அளவு 60 டெசிபெல்லுக்கு மேலே இருந்தால் நமது உடல் நலத்தை பாதிக்கும் என்பது மருத்துவ உலகம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள உண்மை. மெல்லிய காதுச் செவிப்பறைகளைச் சேதப்படுத்தும் இந்நாசகார ஒலி மூக்கு, தொண்டை உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் வெகுவாகப் பாதித்து உடல் நலிவை உண்டாக்குகிறது.

இசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கும் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்.

சரி, இசைக்கணக்குதான் சரியில்லை. ஏதாவது பயனுள்ள செய்தியாவது இக்கச்சேரிகள் மூலம் சொல்லப்பட்டால் கொஞ்சம் காது கிழிபடுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். திருமண வரவேற்பு மட்டுமல்ல; கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் 'ஆர்க்கெஸ்ட்ராக்களில்' அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் அறைக்கிறார்கள். மாவு அறைப்பவர்களும் (பாடுபவர்கள்) எந்திரங்களும்தான் (இசைக்கருவிகள்) வேறுபடுகின்றன. வேறென்ன சொல்ல.

ஊரான்.

3 comments:

  1. இதே கருத்தை நான் முன்பு எழுதினேன். இசைக்குழு அவர்கள் 'பாட்டு'க்கு பாடுகிறார்கள். கல்யாண விருந்தினர் அவர்கள் பாட்டுக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் ஒரு வரவேற்புக்கு போனப்போ, குழுவினர், "உலவும் தென்றல் காற்றினிலே......" (மந்திரிகுமாரி) பாடிக்கொண்டிருந்தார்கள். சாப்பிட வாங்க என்று எல்லோரும் அழைக்க, பாட்டு முடிந்ததும் வருகிறேன் என்று அந்த பாட்டு முழுதும் கேட்டு எழுந்து கை தட்டினேன். சற்றும் எதிர்பாராத பாராட்டினால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்ல முடியாது. என் பதிவைப் பார்த்து கமெண்ட் எழுதுங்களேன்.

    சகாதேவன்

    ReplyDelete
  2. நன்றி! திரு. சகாதேவன் அவா்களே!

    உங்கள் பதிவைப் பார்த்தேன்.

    பாட்டுக்கச்சேரிகளால் திருமணத்திற்கு வந்திருப்போர் படும்பாட்டை நீங்களும் அன்றே உணர்ந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிவுலகிற்கு என்னைவிட நீங்கள் முன்னோடி. நான் புதியவன். எனது மூன்றாவது பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். உங்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

    நல்லதொரு கருத்தை வந்தடைய இது போன்ற பகிர்வுகள் பெரிதும் உதவும்.

    வாழ்த்துக்களுடன்,

    ஊரான்.

    ReplyDelete