Saturday, November 20, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?

சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கனிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.

எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.

தொடரும்........

1 comment:

  1. ஓஓஓஓஓ சென்னை டிராபிக்கா? எங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துவிடும். கோவையும் ஒன்றும் சளைத்ததல்ல.
    ரொம்ப நாள் கழித்து சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். ஒரு இடமும் புரியவில்லை.

    ReplyDelete