Saturday, December 11, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ----- இறுதிப் பகுதி

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைவதும், இனப்பெருக்கம் செய்வதும் உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). இதற்காக மனித இனம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதான் திருமணம். இந்த ஏற்பாட்டிற்கு எவை அவசியமானதோ அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. இதற்கு மேலும் செய்யக்கூடியவை பொருள் விரயத்தையும், காலவிரயத்தையும் மட்டுமே விட்டுச்செல்கின்றன. இந்தப் பொருள் விரயமே பின்னால் மிகப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது. 

குடும்ப வாழ்க்வைத் தொடங்கிய பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமானது. உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பெற்று பிள்ளை குட்டிகளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாக வாழ்வதற்குத்தான் "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ" வாழ்த்துகிறார்கள் போலும். 

ஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.  

அடிப்படைத் தேவைகளுக்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். கட்டுப்படியாவதில்லை. நம்மை ஆளும் அரசுதான் நமது வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகும். சரியான அரசு இல்லை என்றால் மக்களின் வாழ்வு அதோ கதிதான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசு தோன்றுவதற்கு முந்தைய ஆதிகால சமூக வாழ்க்கையில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் வாழ்ந்து வந்தான். அரசு பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய சமூகத்தில் அரசுக்கு வெளியே தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது.

எந்தத் தொழிலை நாம் தேர்வு செய்தாலும், அந்தத் தொழிலின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசுதான். இதற்கு ஏற்பதான் அத்தொழிலில் நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைப்பவர்கள் ஓரளவு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திண்டாடுகிறார்கள். விவசாயம், நெசவு உள்ளிட்ட எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் இல்லை. படிக்க வசதியில்லை. படித்தாலும் வேலையில்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விக்கிற விலைவாசியில் எதைத்தான் வாங்க முடியும்?. நேற்று தாராபுரத்தில் கத்தரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இவைகள்தானே நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகள். 

பிள்ளைப் பேறு அவரவர் உடலியற்கூறு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இன்று பொருள் ஈட்டும் நடவடிக்கையே மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவனை மலடாக்கி வருகிறது. பிறகு பிள்ளைப் பேறுமட்டும் எப்படி நல்லபடியாக அமையும்?.

உணவுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால மனிதன் பலப்பல நோய்களுக்கு ஆளாகிறான். பிறகு எப்படி நலமோடு வாழமுடியும்?.

வரதட்சணைக் கொடுமை, மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகளால் வரும் தொல்லைகள், ஆண் வாரிசு இல்லை என்றால் அதற்குக் காரணம் ஆண்தான் என்றாலும் அதற்காக பெண்ணையே குற்றவாளியாக்கும் இந்தச் சமூக மடைமைத்தனம் என பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள். இவையும் இன்றைய சமுதாயத்தின் பொருள் உடைமை வெறியின் விளைவேயன்றி வேறல்ல. 

ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் துன்பங்களோடும் துயரங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஜாதகமா அல்லது அரசின் செயல்பாடுகளா? இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா? அல்லது நாம் கடைபிடிக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இத்துன்பங்களைத் துரத்துமா?


முற்றும்.

ஊரான்

1 comment:

  1. தோழர் தமிழன் அவர்களால் தகவல் உலகம் (http://theriyumaithu.blogspot.com) வலைப்பூவில் இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete