Friday, March 11, 2011

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று!

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுமனைப் புகுவிழா நடத்தினார். கிரஹப்பிரவேசத்துக்குரிய சகல சம்பிரதாயங்களோடுதான் இந்த விழாவும் நடைபெற்றது. நடுத்தர வர்க்கத்து இரசனைக்கேற்பதான் வீடு கட்டியிருந்தார். விழாவிற்கு வந்தவர்கள் வீட்டை ஒரு நோட்டம் விட்ட பிறகு இது நல்லா இருக்கு. அது எதற்கு? இங்கே இதை வைக்கலாம். அதை அங்கே வைக்கலாம். பக்கத்தில் உள்ள காலியிடம் யாருடையது? எனக் கேள்விகளை எழுப்பி சிலவற்றிற்கு பதிலையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வீட்டைக் கட்டியவரோ 'பார்க்கலாம்' என்பது போல தலையசைத்தார். தலையை மட்டும்தான் ஆட்டமுடியும். ஏற்கனவே கடன் எனும் ஈட்டி தலைக்கு மேலே தயாராய் இருக்கிறது.

எல்லோரும் வீட்டைப் பார்த்தபோது நான் மட்டும் ஐயரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஐயர் அல்ல இரண்டு ஐயர்கள் வந்திருந்தார்கள். முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளவயது ஐயர்கள். மாநிறத்தில் வாட்டசாட்டமாய் வாலிப மிடுக்கோடு இருந்தார்கள். இவர்கள் மந்திரம் ஓதும் ஐயர்கள் மட்டுமல்ல, மல்யுத்தத்திற்கும் தயாராய் இருக்கும் பரிவாரக் காளைகள் என்பதை உடற்கட்டு எடுத்தியம்பியது. தேவநாதன்களின் சூட்சமம் இதுதானோ? 

ஐயர்களைப் பார்க்க வேண்டுமானால் காலை ஆறுமணிக்குள் செல்ல வேண்டும். ஆறு மணிக்குமேல் கிரஹப்பிரவேசம் நடத்தப்படாது. பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அப்போது இருப்பார்கள். நண்பர்கள் எல்லாம் பின்னர்தான் வருவார்கள். இது வாடிக்கை.

நெருப்புக் குண்டம் வைத்து யாகம் வளர்த்தார்கள். வீட்டு உரிமையாளரும் அவரது துணைவியாரும் புதுமணத் தம்பதியராய் மாறியிருந்தார்கள். ஐதீகப்படி இது அவர்களுக்கு இன்னொரு திருமணமாம். ஐயர் ஏதேதோ மந்திரங்களைச் சொல்லி வீட்டில் புகையைக் கிளப்ப வந்திருந்தோர் கண்களைக் கசக்க சம்பிரதாயங்கள் முடிந்தன. ஒன்றரை மணி நேரத்தில் வேலை முடிந்தது. ஐயர்களின் வேலை நேரத்தை ஆண்டவன் அன்றே தீர்மானித்து விட்டான். அதற்கு மேல் நீங்கள் வேலை வாங்கினால் அது தெய்வக் குத்தம் ஆகிவிடும். 

அக்கினியில் எரிந்தது போக மீதியை சுருட்டி மூட்டைக் கட்டினார்கள். இது ஒரு ஐநூறு தேரும். ஒன்றரை மணி நேர கூலி மட்டும் ஆயிரத்து ஐநூறு. மொத்த வசூல் இரண்டாயிரம். எந்தத் தொழிலில் இத்தனை வரும்படி வரும்?

பிரவேசமெல்லம் விடிவதற்குள் முடிந்துவிடும். அதன்பிறகு 6-7.30, 9-10.30 என இரண்டு முகூர்த்தங்களை நடத்தினால் மேலும் ஒரு ஆறு தேறும். ஆயிரமாயிரமாய் ஐயர்களுக்கு அள்ளித் தரும் அட்சய பாத்திரங்களையும் அவர்களே தயாரித்து வைத்துள்ளதுதான் அவாளின் சாமார்த்தியம்.

இடுப்பைச் சுத்தி 'செல்போன்கள்', அடுத்த முகூர்த்தத்துக்கு விரைந்து செல்ல 'ஸ்பிளண்டர்கள்', மூட்டை முடிச்சை எடுத்துச் செல்ல மூட்டையின் அளவைப் பொருத்து 'டி.வி.எஸ் ஃபிப்டியிலிருந்து' மகிழுந்து (car) வரை என சகல வசதிகளும் இவர்களுக்குச் சொந்தம். நம்மால் ஐம்பதுகளில்தான் பூமி பூஜையே போடமுடிகிறது. அவாளெல்லாம் முப்பதுகளில் பிரவேசத்தையே முடித்து விடுகிறார்கள். பாலைக்கூட இன்று 'பாக்கெட்டில்' கேட்கும்போது முடியாதா என்ன?

"'அங்கிள்', நீக்களும் கோயிலுக்குப் போங்க. எங்கள மாதிரி 'கார்' வாங்கலாம்" என என்னிடம் விளிக்கும் ஏதும் அறியா எதிர் வீட்டு 'ப்ரி.கே.ஜி' பெண் குழந்தைக்கு எப்படி தெரியும் இதெல்லாம் அவாள் மட்டுமே செய்யும் தொழில் என்று.   

உலக மயத்தால் அமெரிக்காவின் கதவுகள் திறந்த போது முதல் ஆளாக உள்ளே நுழைந்தவர்கள் ஐயர்கள்தானே. ஒரு சிலர் 'ஐ.டி'துறையில் ஐக்கியமாக, எஞ்சியவர்களுக்கோ ஏக கிராக்கி. பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என நாம் யோசிப்பதற்குள் பையை எடுத்துக் கொண்டு அவாளெல்லாம் கிளம்பி விடுகின்றனர். மந்திரம் ஓதும் தொழிலுக்குதான் எத்தனை மவுசு. யானை செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அது இதுதானோ!

ஒரு பக்கம் உலக மயத்தால் ஆட்குறைப்பு, ஆலைமூடல் என உள்ளதும் பறிபோகுதே என நாம் அங்கலாய்க்கிறோம். வாழ்க்கை நெருக்கடிக்கு வழி தெரியாததால் பரிகாரங்களை நாடுகிறோம். ஐயர்கள் இல்லாமல் பரிகாரம் ஏது? ஐயர்களே எட்டிப் பார்க்காத சேரிகள்கூட இன்று அவாளின் தொழிற் பேட்டைகளாக மாறிவிட்டன. தொழில் பெருகிவிட்டது. பரிகாரம் செய்ய தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. அதியமான்=லிபர்டேரியன் 'தியரிப்படி' இங்கே 'டிமாண்ட்' அதிகம். 'சப்ளையோ' குறைவு. விலை... கூலி.....கட்டணம் ஏறாதா பின்ன? 

இன்று மந்திரம் ஓத ஆள் பற்றாக் குறை என்றால் பாருங்களேன். ஆள் பற்றாக் குறையை சமாளிக்க அய்யன் கலைஞர் ஆணை பிறப்பிக்க, அதைப் பிடுங்கி அடுப்பில் போட்டு விட்டார்கள். சாஸ்திர சந்தையில் போட்டிக்கு இடமில்லையாம். ஊக்குவிப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் போட்டியாளர்களை ஒழிப்பதுதானே உலகமயம், தாராளமயம், தனியார்மயம். உலக மயத்தின் முதல் வெற்றி இங்கேதான் தொடங்குகிறது.

இன்றைய சாஸ்திரத் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது உலக மயம்தான். அதை 'மோனோபோலியாக' தக்கவைத்துக் கொள்வது அவாளின் சமார்த்தியம்.

ஒன்றரை மணி நேரத்தில், சிறுநகரங்களில் ஆயிரங்களையும் சென்னை போன்ற பெருநகரங்களில் பத்தாயிரங்களையும் சுலபமாய் அள்ள முடியும். கை ராசிக்கேற்ப ஆயிரங்கள் அதிகமாகுமேயொழிய ஒரு போதும் குறையாது.

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று! 

2 comments:

  1. இங்கே சிங்கப்பூரில் மந்திரம் ஓதும் கூட்டத்துக்கு கொழுத்த வருவாய்.
    வீடு, கோவில், திருமணம், சாவு,.. இன்னும் எத்தனையோ நிகழ்சிகளுக்கு இவர்கள் நோகாமல் வாழ்கை நடத்துகிறார்கள்.
    ஊரில் இருந்து வரும் மற்ற தமிழர்கள் பத்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் வேலை செய்தால் தான் வாழ்வதற்கே வருமானம் கிடைக்கும்.
    இவ்வளவு முன்னேறிய நாட்டிலும்,. பல இந்திய பூ கடைகளில் பசுவின் மூத்திரம் பரவலாக விற்கிறார்கள். வெட்ககேடு.
    விஷயம் வேறு யாருக்காவது தெரிந்தால் தமிழர்களை கேவலமாக நோக்குவார்கள்.

    ReplyDelete
  2. ஒரு இந்து எங்கே சென்றாலும் அவர் பின்னே ஒரு ஐயரும் செல்வார். கக்கூசில் வாழ்ந்தாலும் விடுவதில்லை. நோகாமல் வாழக் கற்றுக் கொண்டவர்கள். சிங்கப்பூரின் நிலமையை அழகாகச் சொன்னீர்கள்.

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete