Tuesday, December 13, 2011

கொழந்த அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

எமது தெருவில் புதுத் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே ஒன்றே முக்கால் கிலோகிராம் எடைதான் இருந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் குடியிருக்கும் வீடு சற்றே வசதியானதுதான். ஒரு நடுத்தர வர்க்கத்துக்குரிய வசதிகள் அனைத்தும் அவர்கள் வீட்டில் இருக்கின்றன. அனைத்தும் இருந்தும் என்ன செய்ய?

பச்சிளம் குழந்தை அழுத வண்ணம் உள்ளது. தாய்ப்பாலை குடிக்க மறுக்கிறது. ஆங்கில மருத்துவரைப் பார்க்கிறார்கள். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு "ஒன்றும் பிரச்சனை இல்லை, படிப்படியாக சரியாகிவிடும்" என்று சொல்லி சில மாத்திரைகளை கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர்.

கொழந்தை அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

ஒரு வாரம் பார்க்கிறார்கள். குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இவர்களுக்கும் அழுகை அழுகையாய் வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பாட்டி சொன்னபடி ஜோசியரை நாடுகிறார்கள்.

”தற்போது தங்கியிருக்கும் வீட்டு அமைப்பு சரியில்லை, அதனால்தான் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது,  குழந்தை அழுகையை நிறுத்த ஒரே வழி குழந்தையும் தாயும் வேறு வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார் ஜோசியர்.

மருத்துவராவது குழந்தையைப் பார்த்துவிட்டு மருந்து சொன்னார். ஆனால் ஜோசியரோ குழந்தையையும் பார்க்கவில்லை; வீட்டையும் பார்க்கவில்லை. ஜாதகத்தைப் பார்த்தே தீர்வு சொல்லிவிட்டார். அதையும் நம்பினார்கள். தற்போது நான்கு வீடு தள்ளி இருக்கும் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டில் தாயும் சேயும் தங்கியுள்ளார்கள். ஆனால் குழந்தை அழுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

இப்போது புது பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. "ஏற்கனவே மூனு பொண்ணுங்கள வச்சுகிட்டு, ஒவ்வொருத்தரும் படிக்கிறதுக்கு எடம் பத்தாம கஷ்டப்படறோம். இப்ப இவங்கவேற,  இது எத்தினி நாளிக்கோ" என புலம்ப ஆரம்பித்துவிட்டார் வீட்டோட அம்மா.  

இப்போது இந்த அம்மா தங்களது கஷ்டத்துக்கு ஜோசியரைப் போய்ப் பார்த்தா "இந்த வீடு சரியில்ல. வேற வீட்ல தங்கிக்கங்க" என்று சொல்வாரோ!

அழுகைக்கான காரணத்தை குழந்தையால் சொல்ல முடியாது என்றாலும் அது தற்காலிகமானது. ஆனால் மனிதனின் அழுகை?

அழாத மனிதன் ஒருவனை இவ்வுலகில் காண்பதறிது. வாய்விட்டு ஒருவர் பேசினால் அழுகைக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆறுதல் சொல்லலாம் அல்லது நோயினால் / காயம் பட்டதனால் வந்த அழுகை என்றால் மருத்துவம் பார்க்கலாம். அழுகை நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.

அழுகையும் ஹோமியோபதியும்

அறிவுரை கூறும் போது,
தனிமையில் இருக்கும் போது,
கோபம் அடையும் போது,
கவலையில் இருக்கும் போது,
அன்பாய் பிறர் தன்னை அரவணைக்கும் போது,
தன்னோடு பிறர் முரண்படும் போது,
இருட்டைக் காணும் போது,
 நம்பிக்கை இழக்கும் போது,
ஏமாற்றம் அடையும் போது,
உணர்ச்சி வசப்படும் போது,
எதிர் காலத்தை நினைக்கும் போது,
பிறர் தொடர்ந்து தன்னைக் கவனிக்கும் போது,
படபடப்பின் போது,
கனவு காணும் போது,
தான் கேட்டது எதுவும் கிடைக்காத போது,
பிறர் மீது கருணை காட்டும் போது,
பிறர் தனக்கு நன்றி கூறும் போது,
விரத்தியடையும் போது,
தனது துன்ப துயரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது,
தனக்குள்ள நோய் பற்றி கூறும் போது

என இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் அழத்தான் செய்கிறோம். இவற்றை எல்லாம் துயரருக்கான (நோயாளிக்கான) குறிகளாக கணக்கில் கொண்டு ஹோமியோபதி மருந்து கொடுத்தால் சரியாகி விடும் என்பது ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு.

பேசமுடியாத கைக்குழந்தைகள் சதா அழுத வண்ணம் இருப்பதை பார்க்கிறோம்.குழந்தை எதற்காக அழுகிறது? பசிக்காக அழுகிறதா,  பயத்தினால் அழுகிறதா,  வலியால் அழுகிறதா எனக் கண்டறிவது கடினம்.

காரணம் தெரியாததால்தான் குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வீட்டிற்கு தற்காலிகமாக மாறுகிறார்கள்.'ஒரம் வுழுந்திடிச்சி' என உலக்கையை வைத்து பாட்டிமார்கள் 'ஒரம்' எடுக்கிறார்கள்.

ஆனால் குழந்தை அழும் தன்மைகளைக் கண்டறிந்து அதற்குரிய ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தால் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியும் என்கின்றனர் ஹோமியோபதி மருத்துவர்கள்.

மனிதன் ஏன் அழுகிறான்?

குழந்தை மட்டும் தொடர்ந்து அழவில்லை. மனிதன் இறக்கும் வரையிலும் அழுது கொண்டுதான் இருக்கிறான். இறந்த பிறகும் பிறரை அழ வைக்கிறான். ஒருவர் இறக்கும் போது அவர் மீதான பாசம் மட்டுமே நம் அழுகைக்குக் காரணமா? இறந்து போனவரை நம்பி வாழ்ந்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்ற எதிர்கால அச்சம் நம் அழுகையை அதிகரிக்கிறதா? இப்படி ஒவ்வொரு அழுகைக்கும் உள்ளார்ந்த காரணம் இல்லாமலில்லை.

எல்லோர் மீதும் நமக்குப் பாசம் வருவதில்லை. நமக்கு வேண்டியவர், நம்மைப் போன்றவர் என்கிற பொருளியல், கருத்தியல், உறவு ரீதியானதொரு பிணைப்பு பாசத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. பாசம் கூட ஒருவித தன்நலத்தின் வெளிப்பாடுதான். இன்றைய சமூகம்  தன்நலத்தைப் வலியுத்துகிறது. தன்நலம் பாசத்திற்கு வித்திடுகிறது. தன்நலமும் பாசமும் பிரிக்க முடியாதவை. தன்நலத்தைப் பேணும் வரை பாசமும் தொடரும். பாசம் தொடரும் வரை அழுகையும் நீடிக்கும். அழுகை வெறும் உணர்வு சார்ந்த ஒன்றல்ல. அது சமூகம் சார்ந்த ஒன்று.

மருந்துகள் அப்போதைக்கான அழுகையை வேண்டுமானால் நிறுத்தலாம். ஆனால் அழுகைக்கான காரணங்கள் புற உலகில் நீடிக்கும் வரை அழுகைக்கு முடிவேது?

2 comments:

  1. தன்நலத்தைப் பேணும் வரை பாசமும் தொடரும்.இந்த பாசமும் ஒரு சுய நலன்தானே!!

    ReplyDelete
  2. அழுகை வரும் காரணங்களை பற்றி நீங்கள் பட்டியலிட்டாலும், அழுகையிலும் கூட நம் சமூகம் பால் வேறுபாடு பார்த்து ஆம்பளையா பொறந்துட்டு அழலாமான்னு கேட்குது? இப்படி சொல்லி சொல்லியே சின்ன வயசுல என்னை ஒழுங்கா அழவிடலை! ஆணாய் பிறந்தால் அழக்கூடாதா? அழுகை பெண்களுக்கு மட்டும் உரியதா?

    ReplyDelete