Sunday, July 22, 2012

உபதேசங்களால் பொறாமை அகலுமா? அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ---இறுதிப் பகுதி.


பைபிளில்  பொறாமை:

“ஈசாக்கு பயிர்த்தொழில் மூலம் நூறு மடங்கு அறுவடை செய்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்த்து பெரும் செல்வந்தராகியதைப்பார்த்து பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். ஈசாக்கின் தந்தை அபிரகாம் காலத்தில் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்துவிட்டனர்.” (தொடக்க நூல்: 26: 12-15)

“சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?” (நீதி மொழிகள்: 27: 4)

‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.” (மாற்கு: 7:21-22)

“வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!” (கலாத்தியர்: 5:26)

”உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்” (யாக்கோபு: 3:14)

”ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;” (பேதுரு: 2 1-3)

திருவிவிலியம் நெடுகிலும் இப்படி பொறாமை பற்றி ஏராளமான வசனங்கள் வருகின்றன. கி.மு 2000 லிருந்து கி.பி 95 வரையிலான காலகட்டத்தில் கிருத்தவம் பரவிய மத்திய தரைக்கடலையொட்டிய நாடுகளில் மக்களிடையே நிலவிய பொறாமை குறித்து நாம் அறிய முடிகிறது. இயேசுநாதரும் அதன்பிறகு வந்த பல்வேறு நற்செய்தியாளர்களும் இப்பொறாமை குணத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு போதித்தனர்; இன்றளவும் போதகர்கள் போதித்து வருகின்றனர்.

குர்ஆனில் பொறாமை

மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும் எனவும், பொறாமை கொள்வது நல்வழிப் பெறுவதையும் தடுத்துவிடும் எனவும், பொறாமை கொள்பவனின் தீங்கைவிட்டு அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுவது குறித்தும் பல்வேறு வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய சமூகத்தில் மக்களிடையே பொறாமை குணம் நிலவியதை குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.

பொறாமை குறித்து விவேகானந்தர்

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்! என்று விவேகானந்தர் குறிப்பிடுவது தற்காலத்திலும் பொறாமை குணம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."

உபதேசங்களால் பொறாமை அகலுமா?

புராண இதிகாச காலந்தொட்டு இன்று வரை பொறாமை குணம் மக்களிடையே வேரூன்றி உள்ளது. இந்து – பௌத்தம் - கிருத்தவம் – இஸ்லாம் உள்ளிட்ட மத போதனைகளாலும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களாலும் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து விரட்ட முடியவில்லை.

பொறாமை குணம் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் உள்ளத்திலிருந்து மட்டும் தானாக உருவாகும் குணம் அல்ல; அது சமூகத்தில் நிலவும் அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உருவாகும் குணமாகும். ஏற்றத்தாழ்வான சமூகம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும். வெறும் உபதேசங்களால் பொறாமை குணத்தை ஒழிக்க முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது; இன்றைய நடைமுறையும் உணர்த்தி வருகிறது. எனவே ஏற்றத்தாழ்வான இச்சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடாகத்தான் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து ஒழிக்க முடியும்.

முற்றும்.

2 comments:

  1. பொறாமைக் குறித்து வள்ளுவரும் கூறியுள்ளார். புத்தரும் கூறியுள்ளார். உண்மையில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும் போது குறிப்பாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஒங்கும் போது பொறாமையும் அதிகரிக்கும். உபதேசங்களால் பொறாமை ஒழியவே ஒழியாது, சமூக மாற்றத்தால் குறைக்களாம். ஒழிக்க முடியாது . சில மனித குணங்களை ஒழிக்க்வே முடியாது, புரிதல்களால் அதன் வீரியத்தைக் குறைக்கலாம்.

    கடவுள் ஏன் பொறாமை குணத்தை படைக்க வேண்டும். தப்பு அவர் மீது தானுள்ளது ...

    ReplyDelete
  2. ஏற்றத்தாழ்வான சமூகம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும்.மறுக்க முடியாத உண்மைகள்

    ReplyDelete