Tuesday, July 24, 2012

நாடற்றவர்களா பெண்கள்?

தேர்தல் என்று வந்துவிட்டால் தங்களது சாதிக்காரன் – மதத்துக்காரன்  என்று பார்த்துதான் பெரும்பாலும் மக்கள் வாக்களிக்கிறார்கள். அவனும் வெற்றி பெறுகிறான். ஆனால் தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பதவியைப் பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். இது ஒவ்வொரு தேர்தலிலும் தொடரும் ஒரு அவலம்.

நாட்டின் கீழ்மட்ட பதவிகளிலிருந்து உயர் மட்ட பதவிகளுக்கு வரும் தன் சாதிக்கார நபர்கள் தம் சாதிமக்களுக்கு – மதத்து மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற கருத்தைதான் மக்கள் கொண்டுள்ளனர்.

ஏழ்மை-வறுமை உள்ளிட்ட பொருளாதாரக் கொடுமைகள் ஏழைகள் எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகியோர் சந்திக்கும் வேறுபல கொடுமைகள் இவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்யேகமான பிரச்சனைகள்.

ஒரு தாழ்த்தப்பட்டவன்  ஜனாதிபதி ஆகிவிட்டால் தாழ்தப்பட்டவர்களின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று நம்பினார்கள். நாராயணன்கள் வந்தார்கள். பதவியை அலங்கரித்தார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மட்டும் அப்படியே நீடிக்கிறது. நீடிக்கிறது என்று சொல்வதைவிட மிகக்கேவலமாகி வருகிறது.

ஒரு இஸ்லாமியன் ஜனாதிபதியாக வந்துவிட்டால் இஸ்லாமியர்களெல்லாம் இனி இந்தியாவில் பாதுகாப்பாக வாழ வழி பிறக்கும் என கனவு கண்டார்கள். கலாமும் வந்தார். கனவு காணச் சொன்னார். ஆனால் இஸ்லாமியனின் கனவு மட்டும் கானல் நீராகிப்போனது.

ஒரு பெண் ஜனாதிபதியாகிவிட்டால் பெண்ணினத்திற்கே பெருமை; பெண்கள் இனி தலை நிமிர்ந்து வாழலாம் என நம்பச் சொன்னார்கள். பலர் நம்பவும் செய்தார்கள். பிரதிபா பாட்டிலும் ஜனாதிபதியானார். ஐந்து ஆண்டுகள் நாட்டையும் உலகையும் சுற்றி வலம் வந்தார். இவர் சிறகடித்துப்பறந்து முடித்தபோதுதான் கௌகாத்தியில் 17 வயது பள்ளி மாணவியின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட காலிகள் அப்பெண்ணை இழுத்து வந்து உடைகளைக் களைந்து பாலியல் தொந்தரவு செய்து தாக்குகிறார்கள்.

கடந்த ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல், கணவன் மற்றும் உறவினர்களால் சித்திரவதை, கடத்தி விற்கப்பட்டது உள்ளிட்ட பெண்கள் மீதான குற்றச்செயல்கள்: 2 61 000 எனவும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள்: 42 968 எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

1953 முதல் 2011 வரை கற்பழிப்புகள் 873% அதிகரித்துள்ளன. 22 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடந்துவருகிறது. வரதட்சணைக் கொடுமைக்காக 58 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் எரிக்கப்படுகிறாள்.

கடந்த ஏழு நாட்களில்

ஜீலை 17: தனது வீட்டுச்சுவரை அசிங்கப்படுத்தியதைத் தட்டிக்கேட்ட ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஒடிசாவின் ஐகத்சிங்பூரில் அடித்துக் கொல்லப்படுகிறாள்.

ஜீலை 17: கர்நாடகாவின் பெல்காமில் 33 வயது உஜ்வாலா ஜினப்பாவின் முகத்தில் சிலர் அமிலத்தைக்கொண்டு தாக்குகிறார்கள். அவர் முகம் சிதைந்து போகிறது.

ஜீலை 18: மும்பையில் ரவுடி ஒருவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போது அப்பெண் தப்பிக்கிறாள். ஆனால் அந்த ரவுடி மேலும் இருவரைச் சேர்த்துக்கொண்டு சிவாஜிநகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவளது சகோதரனையும் தாயையும் தாக்குகிறான். மீண்டும் அப்பெண் தப்பிக்கிறாள்.

ஜீலை 20: கோவாவின் பனாஜி நகர் போன்டா காவல்நிலைய பெண்காலரைத் தாக்கியதற்காக சர்வேஷ் நாய்க் என்கிற கான்ஸ்டபிள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜீலை 20: மாவெலி விரைவு ரயில் பேன்ட்ரியில் பணியாற்றும் ஒருவர் பெண் பயணியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததால் கேரளாவின் கொச்சியில் கைது செய்யப்படுகிறார்.


ஜீலை 22: உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திலேயே காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு இளம் பெண்ணை கதறக் கதறக் கொத்திக் குதறியுள்ளனர்.

மேலும்....

முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் ஒரு இஸ்லாமியனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக ரூமிநாத் என்கிற காங்கிரஸ் MLA அசாமின் கரீம்கஞ்ச்சில் ஒரு ஓட்டல் அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பலால் ஜீன் 29 அன்று தாக்கப்படுகிறார்.

2008 ல் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஒரு பப்பிலிருந்து வெளியே வந்த பெண்ணொருத்தியை 70 க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குகிறது. இன்று வரை அத்தாக்குதலுக்கு நீதி கிடைக்கவில்லை.

2009 ஜீன் 24 அன்று பப் ஒன்றில் சில பெண்கள் ஸ்ரீராம்சேனா காலிகளால் தாக்கப்படுகிறார்கள்.

இப்படி பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. பட்டியலிட பக்கங்கள்தான் போதாது.


உலகின் இரண்டாவது மிகப்பெரிய 'ஜனநாயக' நாடான இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கின்றன.

கா(லி)விகளின் கவலை

பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? அவர்கள் உடைதான் என திருவாய் மலர்ந்துள்ளார் மத்தியப்பிரதேச  மத்திய பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா (பா.ஜ.க). குஜராத்தில் பர்தாபோட்ட பெண்களையே கதர வைத்தவர்கள்தான் இப்படிச் பேசுகிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணம் என கூக்குரலிடும் இக்காவிகள் வரதட்சணை உள்ளிட்ட வேறுபல காரணங்களுக்காக பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைப்பற்றி ஏன் பேசுவதில்லை?

பெண்கள் கண்ணியமான உடை அணிவதாலோ, கடுமையான சட்டங்கள் இயற்றுவதாலோ, சட்டத்தை மிகக் கறாராக அமுல்படுத்தும் கண்ணியமான அதிகாரிகள் மூலமாகவோ பெண்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுமா? சதவீதக் கணக்கில் அல்லது புள்ளிவிவரக் கணக்கில் ஒன்றிரண்டு குறையலாமேயொழிய பொதுவாக தாக்குதலின் அளவு குறையப் போவதில்லை.

நாடற்றவர்களா பெண்கள்?

ஒரு பெண் ஜனாதிபதியாக ஐந்து ஆண்டுகள் காலம் தள்ளிய இந்தியாவில்தான் பெண்கள் மீதான இத்தகைய குற்றங்கள் அரங்கேரி வருகின்றன. ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ பிரதீபா என்ன செய்தார்? என்ன செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். குறைந்த பட்சம் பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கல்கள் நடக்கின்றன என்பதாவது தெரியுமா? எப்படித் தெரியும். ஒரு ஐந்தாண்டு காலம் அரசின் செலவில் பாதுகாப்போடு இந்தியாவையும் உலகைத்தையும் தான் விரும்பியவாறு சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பைத் தவிர இந்த ஜனாதிபதி பதவி வேறென்ன செய்திருக்கிறது?

ஒரு பெண் ஜனாதிபதியாக இருந்தென்ன? நம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடொன்றில்லையே!

நன்றி: புள்ளிவிவர ஆதாரங்கள் 23.12.2012 டெக்கான் கிரானிகிள், சென்னை

1 comment:

  1. பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணம் என கூக்குரலிடும் இக்காவிகள் வரதட்சணை உள்ளிட்ட வேறுபல காரணங்களுக்காக பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைப்பற்றி ஏன் பேசுவதில்லை?...........

    புதிய பிரமாணத்துவம் பரப்பி வரும் ஒரு கேடுக் கெட்ட பிரச்சாரம் இதுவாகும் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால் இவர்களுக்கு மூடு வந்து கெடுத்துவிடுவார்கள்.கேட்டா பெண்ணுகள் தப்பாம். இதே சொல்லி பர்தா போடச் சொல்லி இன்னொரு கூட்டம். ஒரு பெண் அம்மணமாகவே ரோட்டில் போனாலும் கூட அவளை அவள் அனுமதி இல்லாமல் தொட உரிமையும் இல்லை. அப்படி தொடுறவன் சுத்தமான ஆம்பளையும் இல்லை .

    தலித் ஜனாதிபதி ஆனாரு, முஸ்லிம் ஆனாரு, பெண் ஆனாரு, நாளைக்கு திருநங்கை கூட ஆகலாம்.. ஆனா ஜனாதிபதிக்கு என்ன ம.. பவரு இருக்கு .. வெறும் பொம்மை.. மேற்சொன்ன நபர்கள் எல்லாம் முறையே பிரதமர் அல்லவா ஆகி இருக்க வேண்டும் .. எல்லாம் ஒரு உப்புக்குசப்பாணி தான் உலக் நாடுகளுக்கு இந்தியா சமத்துவ ஜனநாயகம்னு தம்பட்டம் அடிக்கணும்

    இந்தியாவில் இருக்கும் ஆண்களுக்கு எதோ ஒரு வியாதினு நினைக்கிறேன் கொஞ்ச நாளாவே தினமும் கற்பழிப்பு கற்பழிப்புனு செய்தி வருது .. இந்த கொடுமையின் உச்சமே ரோட்டில போன பெண்ணை ஒரு இருபது ஆம்பளைங்க ( பூ. இருக்கவன எல்லாம் ஆம்பளையாம் ) அசிங்கப்படுத்தினார்கள் என்னத்தக் கிழிச்சாங்க.. எல்லாரும் ஹாயா சுத்தி திருகின்றார்கள். புகார் கொடுத்த பெண் தான் ஓடி ஒழிகின்றார்கள்.

    நிச்சயம் இந்தியப் பெண்கள் இக்காரணத்தைக் காட்டி வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகலாம் ( asylum ) .. அத விட்டா வேற தீர்வு எனக்குத் தெரியல.. பெண்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு போன அப்புறம் இந்த பூ.. உள்ளூர்ள வேலை இருக்காது செக்ஸ் டாய்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது தான்.

    ReplyDelete