Friday, March 22, 2013

தள்ளாடும் வயதில் தாயைத் தாங்கிப் பிடிக்க யார் இருக்கா?

“எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகி அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றொரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாதக் குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயதுக் குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்”.
தள்ளாத வயதிலும் ஒரு பெண் தன் கணவனை எவ்வாறெல்லாம் பராமரிக்க வேண்டியுள்ளது என்பது பற்றி “கணவனே குழந்தையாய்...” என்கிற முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதே வேளையில் ஒரு கணவன் தனது மனைவியை அவ்வாறு பராமரிக்கிறானா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது.
பொதுவாக மனைவியைவிட கணவனே வயதில் மூத்தவனாக இருப்பதால் முதலில் மூப்பெய்தி மரணத்தை நாடுகிறான். அதன்பிறகு அவனது மனைவி முடிந்தவரை தனியாக வாழ்ந்துவிட்டு அவளும் மரணத்தை நாடுகிறாள். ஒரு வேளை ஒப்பீட்டளவில் மனைவியைவிட கணவன் நலத்தோடு இருக்கும் போது தனது மனைவி நோய்வாய்ப்பட்டுவிட்டால் என்ன நடக்கிறது?
எங்கோ பிறந்தவளை தேடிப்பிடித்து, ஆயிரத்தெட்டு பொருந்தங்கள் பார்த்து, சொந்த பந்தங்களின் ஒப்புதலையும் பெற்று, இவளே தனக்கு ஏற்ற, உற்ற துணை என ஏற்றுக்கொள்கிறான். திருமணத்தை முடித்துக்கொண்டு பெற்றோரும் உற்றாரும் கண்கலங்கி கைவிலக இனி எல்லாமே புகுந்த வீடுதான் என கொண்டவனைப் பின்தொடர்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகும் தனது சொந்த பந்தங்களோடு எப்போதும் போல இயல்பாய் இருக்கிறான் ஆண். ஆனால் அவளுக்கோ கொண்டவனும் புதிது; குடிக்கும் தண்ணர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அக்கம் பக்கம் வாழ்வோரின் மூச்சுக்காற்று என எல்லாமே புதிது என்பதால் அதற்கேற்ப அவள் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். அதுவரை புகுந்த வீட்டில் அவள் அனுபவிக்கும் மனவலியை, உடல் வலியை அவள் மட்டுமே அறிவாள்.
ஒரு நாள் வெளியூர் பயணத்தில் குடி நீர் மாறினாலே ஒவ்வாமை வந்துவிடுகிறது பலருக்கு. புகுந்த வீட்டிற்கு வந்தவளுக்கோ ஓராயிரம் ஒவ்வாமைகள். என்ன செய்வாள் பாவம்? உடல் நலிந்து போனால் “போய் ஒடம்ப சரிபண்ணிட்டு வா” என தாய்வீட்டிற்கே திருப்பி அனுப்புகிறான் கணவன். இப்படித்தான் தொடங்குகிறது மனைவிக்கான பராமரிப்பு.
தாய்வீடு சென்று சரியாகி வந்தாலும் வாரிசுச் சுமையை சுமந்தே ஆக வேண்டும். இது புகுந்த வீட்டின் சுமை என்றாலும்கூட அதை இறக்குவதற்கும் அவள் தாய்வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டும். பெற்றெடுத்த குழந்தையோடு அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பினாலும் குழந்தைக்கு சீக்கு என்றால் அதற்கும் தாய்வீடுதான் கதி. இப்படி பாரத்தை சுமக்க ஓரிடம் – பாரத்தை இறக்க மற்றோர் இடம் என புகுந்த வீட்டிற்கும் தாய்வீட்டிற்குமாய் அலைந்து அலைந்து ஓய்ந்து களைத்து வாழ்க்கையை ஓட்டுகிறாள். தள்ளாடும் வயதில்கூட அவள் தாய்வீட்டின் அரவணைப்பைத்தான் நாடுகிறாள். தாய் வீட்டு உறவுகள் அற்றுப்போய் இருந்தாலும்கூட தாய் வீட்டின் நினைப்பிலேயே அவள் புதுத்தெம்மைத் தேடுகிறாள்.

கணவனுக்கு முடியாத போது மனைவியானவள் தனது கணவனை சொந்தக் குழந்தையைப் போல பராமரிக்கிறாள். பாசத்தினால் அவ்வாறு செய்கிறாளா அல்லது கணவனுக்குப் பணிவிடை செய்வது தனது கடமை என்று இச்சமூகம் ஆணாதிக்கத் திமிரோடு திணித்துள்ளதை ஏற்றதனால் அவ்வாறு செய்கிறாளா என்றெல்லாம் அவள் பார்ப்பதில்லை.

இந்தச் சேவைகளுக்கு அவள் பிரதிபலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை - கணவன் தன்னோடு இருந்தால் போதும் என்பதைத் தவிர! யார் ஒருவர் பிறருக்கு ஆக்கபூர்வமான சேவைகளைப் பிலதிபலன் ஏதும் எதிர் பார்க்காமல் செய்கிறார்களோ அவர்களே ஆரோக்கியமானவர்கள் என கிரேக்க நாட்டு ஹோமியோபதியர் ஜார்ஜ் வித்தல்காஸ் தனது “சைன்ஸ் ஆஃப் ஹோமியோபதி” என்கிற நூலில் ஆரோக்கியத்திற்கான அளவுகோலாக வரையறுக்கிறார். அதனால்தானோ என்னவோ இங்கே தாயானவள் தன்னுடைய தன்னமற்ற சேவையினால் ஆரோக்கியமானவளாகத் திகழ்கிறாளோ?

ஆணோ - பெண்ணோ, தங்களால் செய்து கொள்ள முடியும் என்கிற போது அவரவர் சுய பராமரிப்புகளை – தாங்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுவது முதல் தங்களின் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வது வரை – அவரவர்களே செய்து கொள்வதுதான் நியாயமான நெறிமுறை. ஒருவர் தன்னைத்தானே சுயமாக பராமரித்துக் கொள்ள இயலாத சூழலில் அதாவது உடல் நலிவுற்றிருந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத வேறு சில சூழ்நிலைகளிளோ அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றொரு பெண் பணிவிடை செய்வது சகஜமான இயல்பான ஒன்றாகப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு அதுவும் அவள் நோயுற்று மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் போது - அது தனது மனைவியாகவும் இருக்கலாம் அல்லது தனது தாயாகவும் இருக்கலாம் - அவளுக்கு பல் துலக்க, ஈரத்துணி கொண்டு உடல் கழுவ, மலம் எடுத்து குதம் துடைக்க, சிறுநீர் பிடிக்க, உணவு ஊட்ட, தேனீரோ தண்ணீரோ பருகக் கொடுக்க, மாத்திரை போட, புரை ஏறினால் தலையில் இதமாயத் தட்டிக் கொடுக்க, வாந்தி எடுத்தால் கைபிடிக்க - அப்போது அதற்குரிய கிண்ணத்தைத் தேடிக்கொண்டிருக்க முடியாது - நெஞ்சுச் சளியோ மூக்குச் சளியோ வரும் போது வழித்து துடைத்துவிட, குளிரானால் உடல் போர்த்த, வெக்கையானால் மின் விசிறியை இயக்கிவிட என இத்தனையையும் ஒரு ஆண் செய்யும் போது மூக்கின் நுனி மீது விரல் வைத்து பிரமித்து நிற்கின்றனர் மற்ற படுக்கைகளில் தங்களது உறவினர்களைப் பராமரிக்கும் பெண்கள்.

விதிவிலக்காக ஒருசில கணவன்மார்களைத் தவிர பெரும்பாலான கணவன்மார்கள் மனைவிக்குப் பணிவிடை செய்வதை மிகக் கேவலமானதாகத்தான் பார்க்கின்றனர். மனைவிக்குச் சேவை செய்வது அல்லது அவளுக்குப் பணிவிடைகள் செய்வது ஆணுக்கு இழுக்கு என சமூகம் அவனை எச்சரிக்கிறது. மீறி யாராவது ஒருசிலர் செய்தால் அவர்களை ஏளனமாகப் பார்க்கிறது. இத்தகைய ஆணாதிக்க மனப்போக்கு தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல. இது இந்த நாட்டில் இன்னமும் அழியாமல் நிலைநாட்டப்பட்டு வரும் நிலவுடமைச் சமூகத்தின் கேடு கெட்டப் பண்பாடு. நமது புராணங்களும், இதிகாசங்களும், கதைகளும், நாடகங்களும், திரைப்படங்களும், நெடுந்தொடர்களும், ஞானிகளின் உபதேசங்களும் இத்தகைய பண்பாட்டைத்தான் மிக உயர்ந்த இந்தியாவின் பெருமைக்குரிய பண்பாடாக சித்தரித்து வருகின்றன.

உற்ற துணையே இந்த வறட்டுக் கௌரவத்தை கைவிட மறுக்கும் போது அவள் என்ன செய்வாள் பாவம்? அதுதான் ஆணின் தன்மை என அமைதியாய் ஏற்பதைத்தவிர? ஒரு வேளை பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் குறைந்த பட்சம் உதவிக்கரமாவது நீட்டுவாள். அவ்வாறு யாரும் இல்லை என்றாலும் அவள் பாவப்பட்டு சோர்ந்து விடுவதில்லை. முடிந்தவரை தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளவே முயற்சிக்கிறாள்.

புறநிலை நிர்ப்பந்தம் காரணமாக மருமகள் சில பணிவிடைகளைச் செய்ய முன்வந்தாலும் அவள் 'மூஞ்சைக்காட்டாமல்' இருப்பதில்லை என்பதனால் அவமானத்துக்கு உள்ளாகி உதவிகளைப் பெருவதைவிட முடிந்தவரை தானே பார்த்துக் கொள்வது என்பதிலிருந்து வருவதுதான் இந்தச் சுயபராமரிப்பு. மனைவியை இழந்த மாமனாரின் சுயபராமரிப்பும் இத்தகையதே.

சொத்துடமைச் சமூகத்தின் அவலமாக இன்றுவரை நீடிக்கும் மாமியார் – மருமகள் முரண்பாட்டை தனிநபர் முரண்பாடாக்கி ஒருவரை ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக்கொள்கிறாள் தாய்.

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, March 14, 2013

சாமியார்களின் மோசடிகள்!


சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் ஒரு சில பதிவுகள்... மறுவாசிப்பிற்காக.






Saturday, March 9, 2013

கணவனே குழந்தையாய்.....

தாய்ப்பசு தனது கன்றை ஈன்றவுடன் அதன் மீது படிந்துள்ள சளி போன்ற சவ்வு உள்ளிட்ட கழிவுகளையும் மற்ற பிற அழுக்குகளையும் தனது நாவாலேயே நக்கி நக்கி சுத்தப்படுத்துவதைப் பார்க்கும் போது ஒரு சிலருக்கு வேண்டுமானால் அது அருவறுப்பாகத் தோன்றலாம். தத்தித் தத்தித் தள்ளாடி கன்று வளர்ந்து தானாகவே தன்னை பராமரித்துக்கொள்ளும் வரையில் இந்த அரவணைப்பு தொடர்கிறது. வளர்ந்த கன்று மூப்படைந்து தள்ளாடும் போது தாய்ப்பசுவின் அரவணைப்பை எதிர்பார்க்க முடியாது.
தாயின் மடியிலிருந்து வெளியே வரும் நம்மை ஒரு மருத்துவச்சியோ அல்லது ஒரு செவிலியரோதான் முதலில் சுத்தப்படுத்துகிறார்கள். அதன் பிறகு நாமும் தவழ்ந்து தவழ்ந்து தள்ளாடி தள்ளாடி எழுந்து நடந்து வளர்ந்து நம்மை நாமே சுயமாய் செயல்படும் அளவுக்கு நாம் வளரும் வரை நமது தாய் நம்மை பராமரிக்க என்னமாய் பாடுபடுகிறாள்!
குழந்தையின் மலமோ - மூத்திரமோ, சளியோ – வாந்தியோ அது எதுவானாலும் தாயின் மடியில் போனாலும், தரையில் போனாலும் அக்கழிவுகளை தனது கழிவுகளாகக் கருதுவதால்தான் இவைகள் ஒரு தாய்க்கு அருவறுப்பை ஏற்படுத்துவதில்லை.  அதனால்தான் ஓராயிரம் முறை போனாலும் தயக்கம் ஏதுமின்றி தனது கைகளாலேயே அனைத்தையும் அள்ளி சுத்தம் செய்கிறாள். கைகளால் தொடுவதால் தொற்று வந்து வந்துவிடுமோ என அவள் அஞ்சுவதில்லை. அதற்காக கையுறை எதையும் அணிந்து கொள்வதுமில்லை.
குழந்தையின் ஒழுகும் மூக்குச்சளியை பார்த்துவிட்டு மற்றவர் தங்களது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளும் போது, தாய் மட்டும் தனது குழந்தையின் ஒழுகும் மூக்குச் சளியை தனது வலது கையின் – இடது கை வாட்டப்படாது என்பதால் – கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் இரண்டையும் ஒரு சேர மூக்கின் மீது அணைத்தார்போல மிருதுவாய் அழுத்தி சளியை வழித்து தூர எரிந்துவிட்டு தனது முந்தானையால் துடைத்துக் கொள்வாளே அவள் அல்லவோ தாய்!
எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால் கருவுற்று ஒரு குழந்தைக்குத் தாயாகி அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றோரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாத குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயது குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்.
அந்தக் குழந்தையின் மூக்குச் சளி ஒரு பிஞ்சுக் குழந்தையின் சளி. அதில் நாற்றம் அவ்வளவாக இருக்காது. ஆனால் இந்தக் குழந்தையின் மூக்குச் சளியோ - மூக்குச் சளி மட்டுமல்ல, தொண்டைச் சளி மார்ச்சளியும் சேர்ந்த முற்றிய நாற்றமடிக்கும் கெட்டிச் சளி. அந்தக் குழந்தையின் சளியை துணியால் துடைத்தாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் கோழை கலந்த கட்டி கட்டியாய் கொத்துக் கொத்தாய் கொட்டும் சளியை நீருள்ள கிண்ணம் ஒன்றிலோ அல்லது ‘கேரி பேக்கிலோ’ பிடிக்க வேண்டும். தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட சளியை வெளிக்கொணர இந்தக் குழந்தை படும் அவஸ்தையைப் பார்க்கும் போது அது ஸ்டிக்டா பல்மோனாரியாவை1 நினைவு படுத்தும். சளியை வெளிக் கொணர இக்குழந்தை தொண்டையை காறும் போது எழும் ஓசை பிறருக்கு படு பயங்கரமாய் இருக்கும். அதைக் கேட்க சகியாமல் தங்களது காதுகளை பொத்திக் கொள்வார்கள். அருகில் இருந்தால் சளியைப் பார்க்க சகிக்காது என்பதால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
அந்தக் குழந்தையின் மலமோ பால் வாடையுடன் கூடிய இளகிய மலம். அதிகம் நாற்றம் இருக்காது. இந்தக் குழந்தையின் மலமோ நாற்பட்டுப்போனதால் மூக்கையே துளைக்கும் துர்நாற்றம் கொண்டிருக்கும். அந்தக் குழந்தையின் மலத்தை தண்ணீர் விட்டு அலம்பினாலே துணியில் ஒட்டிக் கொண்டவைகூட சுலபமாய் நீங்கிவிடும். ஆனால் இந்தக் குழந்தையின் மலம் துணியில் அப்பிக் கொண்டால் அதை நீக்க கட்டை துடைப்பம் வேறு தேவைப்படும். மலம் வருவது முன்கூட்டியே தெரிந்தால்கூட அண்டர்பேடையாவது(under pad) வைக்கலாம் - துடைக்கும் வேலை சற்றே சுலபமாகும். என்ன செய்ய? இந்தக் குழந்தைக்குத்தான் மலம் வருவதே தெரியாதே! அந்தக் குழந்தையின் குதத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அலம்பினாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் குதத்தை பஞ்சைக் கொண்டு பதமாய் துடைக்க வேண்டும்.
அந்தக் குழந்தையின் மூத்திரம் வெது வெதுப்பாய் இருக்கும். ஆடைகள் நனைந்தாலும் சிறிது நேரத்தில் உலர்ந்துவிடும். வாடையும் மறைந்து விடும். ஆனால் இந்தக் குழந்தையின் மூத்திரத்தில் பல்வேறு உப்புகளின் மூலக்கூறுகள் கலந்திருப்பதால் ஆடைகள் உலர்ந்தாலும் நாற்றம் மட்டும் மறையாது.
அந்தக் குழந்தையின் உடுப்புகள் அனைத்தும் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போய் அலசிப்போட தாயால் முடியவில்லை என்றால் ஆயாக்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குழந்தையின் துணிகள் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போனால் அலசிப் போட எந்த ஆயாவையும் நாட முடியாதே!
அந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடு (metabolism) வளர்ச்சிக்குரியது. குழந்தை வளர வளர தாயின் பாரம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். ஆனால் இந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடோ அழிவை நோக்கியது. தடியூன்றும் வயதில் இந்தத் தாயின் பாரம் கூடிக் கொண்டே போகும்.
அந்தக் குழந்தைக்கு பற்கள் இன்னும் முளைத்திருக்காது. சாதத்தைப் பிசைந்து உருட்டி வாய் கொள்ளுமட்டும் திணித்தாலும் குழந்தை அதை விழுங்கி விடும். ஆனால் இந்தக் குழந்தையின் பற்களோ இற்றுப் போனவை. சாதத்தைப் பிசைந்தால் மட்டும் போதாது, அதைக் கஞ்சியாக்கி ஒவ்வொரு மொடக்காக வாயில் மெல்ல மெல்ல ஒரு மேசைக் கரண்டி கொண்டு ஊட்ட வேண்டும்.
அந்தக் குழந்தைக்கு உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டு புரை ஏறினால் தலையில் தட்டலாம். ஆனால் இந்தக் குழந்தைக்கு கஞ்சி உள்ளே செல்லாமல் விக்கினால் தலையில் தட்டக்கூடாது. நெஞ்சுக்கூட்டை  மென்மையாய் வருடி விட வேண்டும்.அந்தக் குழந்தைக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எல்லா வகையான உணவுகளையும் வலுக்கட்டாயமாக ஊட்டலாம் – அந்தக் குழந்தை வளர வேண்டுயதல்லவா? ஆனால் இந்தக் குழந்தைக்கு எது பிடிக்கிறதோ - எது ஒத்துக் கொள்கிறதோ அதை மட்டும்தான் உண்ணக் கொடுக்க வேண்டும் – இந்தக் குழந்தை வாழ வேண்டியதல்லவா?
அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் மார்போடு அணைத்து கதகதப்பைக் கொடுப்பாள் தாய். ஆனால் இந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் பாராசெட்டாமோலைத் தவிர வேறெதையும் இந்தத் தாயால் தரமுடியாதே! இந்த பாராசெட்டாமோலைக்கூட தொண்டைக்குள்ளே தள்ள இந்தத் தாய் படாத பாடு பட வேண்டும். வாயில் ஊற்றப்படும் தண்ணீர், மாத்திரை போடுவதற்கு முன்பே உள்வாங்கிவிடும். வாயில் போடப்பட்ட மாத்திரை உமிழ் நீரில் ஊரி அதன் கசப்புத் தன்மையால்  குபுக்கென்று வெளியே வந்து விழும். எப்பாடு பட்டாவது பாராசெட்டாமோலை திரும்ப வாய்க்குள் தள்ளிவிடுவாள் இந்தத்தாய்.
அந்தக் குழந்தைக்கும் சில சமயம் வாயிலிருந்து எச்சில் வழியும். அதை துணி கொண்டு அழுத்தித் துடைப்பாள் தாய். இந்தக் குழந்தைக்கு எச்சில் வழியாது -  கொட்டிக் கொண்டே இருக்கும். அதை அழுத்தித் துடைத்தால் உதட்டுத் தோலும் சேர்ந்தே பிய்ந்து வரும் என்பதால் உதட்டை மென்மையான துணி கொண்டு ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும் – அதுவும் அடிக்கடி.
அந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் அந்தத் தாய்க்குத் தாய் வந்து உதவி செய்வாள். ஆனால் இந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் எந்தத் தாயை இவர் நாடுவார் பாவம்! ஒரு வேளை தான் பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் அவ்வப்போது இந்தத் தாய்க்கு உதவிக்கரமாவது நீட்ட முடியும்.
அந்தக் குழந்தை இவ்வுலகில் பிரவேசித்தவுடன் ஓய்வு தேவைப்படும் போது தாயின் மடியில்தான் தலை வைத்து உறங்குகிறது. இந்தக் குழந்தைகூட தாயின் மடியில்தான் தலைவைத்து ஓய்வை நாடுகிறது - இவ்வுலகை விட்டுச் செல்லும் போது.
கடந்த பதினான்கு ஆண்டுகளாக கடுமையான நுரையீரல் (COPD) பாதிப்பால் மூச்சுவிட மிகவும் சிரமத்திற்குள்ளாகியும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்பால் பெருஞ்சுரப்பி (prostate gland) கோளாரினால் மூத்திரக் குழாய் சுருக்கப்பட்டதனால் மூத்திரம் வெளியேறுவதற்காக சிறுநீர் இறக்குங் குழாயை (SPC catheter) சுமந்து கொண்டு, தனது இறுதி காலத்தில் நடக்கவும் முடியாமல் தரையில் ஒரு குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து இறுதியில் அசைய முடியாமல் படுக்கையிலேயே கிடந்த எனது தந்தைதான் இந்தக் குழந்தை. எனது தாய்தான் இந்தத்தாய்.
இந்தக் குழந்தைதான் மார்ச் 2, 2013 சனிக்கிழமை அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது.
எனது தந்தை பொன்முடி

இப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து ‘போய்த் தொலையாதா’ என சிலர் எண்ணும் இக்காலத்தில்தான், தனது பச்சிளம் குழந்தையை பறிகொடுத்தவளைப் போல கண்கள் குளமாகி விக்கித்து நிற்கிறாள் எனது தாய்!
-------------------------------------------------------------
1. தொண்டைக் குழியில் ஒட்டிக் கொண்ட சளியை வெளிக் கொணர பெரிதும் பயன்படும் ஹோமியோபதி மருந்து
2. நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருப்பவர்கள் மலம் கமிக்கும் போது பயன்படுத்தப்படும் பஞ்சு நிரப்பப்பட்ட ஒரு வகை துணி 
தொடர்புடைய பதிவு: 

எனது தந்தையின் இறுதி மூச்சு!

Tuesday, March 5, 2013

எனது தந்தையின் இறுதி மூச்சு!


"ஹலோ! அண்ணா!
அப்பாவுக்கு.... (எதிர் முனையில் தம்பி... தொடர்ந்து அவனால் பேச முடியவில்லை)

" ஹலோ! மாமா! (தங்கை மகன்)
தாத்தாவுக்கு ரொம்ப முடியல...
உடனே வா.

பத்து கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள தந்தையைக் காண விரைகிறேன்.

அப்பாவின் தலை, அம்மாவின் மடியில்... ஒரு குழந்தையைப் போல,
கால்கள் நீட்டிய நிலையில்...
கைகள் துவண்டு...
கண்கள் மூடிய நிலையில்...
ஹக்...ஹக்... என்ற ஓசையும் சில நிமிடங்களில் காற்றோடு கரைய,
வாய் அசைவற்று நிற்கிறது.

"அவ்வளவுதாண்ணா... ஒண்ணுமில்ல.

தாய் மௌனித்து நிற்க...
எனது துணைவியார் விம்ம...
தங்கை மகன் ஓரமாய் சென்று கதற...
உறுதிப்படுத்த மருத்துவரை அழைத்துவர தம்பி விரைய...

மார்ச் 2 - 2013, சனிக்கிழமை காலை பத்து மணிக்கு,
எனது தந்தையின் இறுதி மூச்சு இப்படித்தான் நின்று போனது.
எனது தந்தை பொன்முடி

கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் நோயுற்று அவதிப்பட்டு வந்த நிலையில், போதுமான அளவு மருத்துவ வசதி செய்து வந்ததால் பல முறை மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டு வந்தவர். எண்பதுகளைக் கடந்ததால் முதுமையின் காரணமாக இம்முறை அவரால் மீள முடியவில்லை.

தனது எளிமையாலும்,
அனைவரிடமும் இயல்பாய்ப் பழகும் குணத்தாலும்,
நூறு கிலோமீட்டருக்கும் அப்பாலிருந்த உறவுகளையும் நட்புகளையும்
குறிப்பாக ஏராளமான தாய்மார்களையும்
இறப்புக்குப் பிறகும் தன்னை நோக்கி ஈர்த்துவிட்டு
இறுதியில் அன்று மாலை 7.00 மணியளவில் எரியூட்டப்பட்டு காற்றோடு கலந்துவிட்டார்.

உறவுகளும் நட்புகளும் அழுது முடித்து அவரவர் வாழ்விடம் நோக்கிச் சென்றுவிட்டனர்.
அன்று  கலங்காத என் கண்கள்...
இன்று குளமாகி நிற்கிறது.
தூக்கம் தூர நிற்கிறது.
நினைவுகள் ஒன்றா... இரண்டா...
மறப்பதற்கு!