Wednesday, December 24, 2014

பண்டாரங்களின் தொந்தியைப் பெருக்கும் சனிப் பெயர்ச்சி!

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)----தொடர்ச்சி


“பூமி விலை அதிகரிக்கும்.
மணல் தட்டுப்பாடு அதிகரிக்கும்.
வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும்.
வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும்.
கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும்.
சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும்.
சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும்.
20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள்.
உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும்.
பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும்.
முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும்.
உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும்.
பருப்பு வகைகள்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.”
இவை சனிப் பெயர்ச்சியையொட்டி ஒரு பண்டாரம் கணித்துள்ள பலன்கள்.
சமூக நிலையை ஓரக்கண்ணால் பார்த்தாலே போதும்; எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒரு பாமரனால்கூட சொல்லிவிட முடியும். எந்த ஓட்டுக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய சமூக எதார்த்தம் இதுதான்.
சனி வீடு மாத்தராராம் எல்லோரும் உஷாரா இருக்கணுமாம். பரிகாரம் செஞ்சிக்கணுமாம். இல்லைன்னா நீங்க உருப்படவே முடியாதாம். இப்படி மக்களிடையே பீதியைக் கிளப்பி கோவில்களை நோக்கி விரட்டுகிறார்கள். இருப்பதையெல்லாம் வாறிக் கொண்டு ஏமாளிகள் கோவில்களை மொய்க்கிறார்கள். வாறிச்சென்றதை எல்லாம் பண்டாரங்களின் தொந்தியில் திணித்துவிட்டு வெறுங்கையோடு திரும்பியதைத்தவிர சனிப் பெயர்ச்சியால் நம் மக்கள் கண்டதென்ன?
தொடரும்...
தொடாபுடைய பதிவுகள்:

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)

Wednesday, December 17, 2014

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)

”இந்தச் சனியன் எப்ப வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சதோ அப்பத்தலிருந்து குடும்பத்துல பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாப் போச்சு. எதச் செஞ்சாலும் வௌங்கல”

மருமகள்களைப் பார்த்து இத்தகைய வசவுகள் வெளிப்படாத வீடுகளே இருக்க முடியாது. நல்லது நடந்தால் மருமகளை ‘மகாலட்சுமி’ என்பதும் கெட்டது நடந்தால் ‘சனியன் – பீடை’ என்பதும் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது. நல்லது நடக்காததற்கு புறக்காரணங்கள் பல இருந்தாலும் எல்லாவற்றையும் சனியின் மீது போடும் பழக்கம் காலம் காலமாக மக்களிடையே நிலவி வருகிறது. ஒருவரும் சனியை பார்த்ததில்லை என்றாலும் இங்கே மருமகளைத்தான் சனியின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.

“இந்தச் சனியன வெறட்டனாதான் நம்ம குடும்பம் உருப்படும்” என எண்ணுவோரும் உண்டு. சனியன் என்றால் ஒருவித அச்சம் கலந்த உணர்வும், அது தம்மை விட்டு அகன்றுவிட வேண்டும் என்கிற பதை பதைப்பும் மக்களிடையே வெகுவாக ஊறிப் போயுள்ளது. இன்று பெருகி வரும் சமூக நெருக்கடிகளில் தங்களின் வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மக்கள் மீளமுடியாமல் தவிக்கும் போது, சனிப் பெயர்ச்சி என்கிற பூச்சாண்டி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக அமைவது பண்டாரங்களால் சொல்லப்படும் சனிப் பெயர்ச்சிப் பலன்களே.  சனிப் பெயர்ச்சியால் நன்மையா? தீமையா என எனக் கேள்வி எழுப்பி, ஒரு சில நன்மைகளை மட்டும் சொல்லிவிட்டு அதிக அளவில் தீமைகளைப் பட்டியலிட்டால் அப்பாவிகள் அச்சப் படாமலா இருக்க முடியும்? இந்த அப்பாவிகள் பட்டியவில் அதிக இடம் பிடிப்போர் மெத்தப் படித்த நடுத்தர வர்க்கமே  என்பது ஒரு அவலமான உண்மை.

இந்த அச்சம், பரிகாரங்களை நோக்கி மக்களை விரட்டுகிறது. பரிகாரங்களைச் செய்வதன் மூலம் இந்தச் சனியின் பிடியிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக சனி பற்றிய நம்பிக்கை  மக்களை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. பரிகாரங்கள் அதிகரிப்பதால் பரிகாரங்களைப் பரிந்துரைக்கும் பண்டாரங்கள் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறார்கள். சனிப் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன் இது ஒன்றுதான். சனிப் பெயர்ச்சியால் வேறெதுவும் நடப்பதில்லை. ஆக, உண்மையில் சனியால் ஆதாயம் அடைவோர் ஒரு சிலர்; பாதிக்கப்படுவோரோ பலர்.

இந்த ஆண்டு 16.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைந்து இங்கு (விருச்சிகம் ராசிக்குள்) 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்தப் போகிறாராம். அண்டத்திலிருந்து கதிரவன் வீசும் கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ள மனிதன் குளு குளு அறைகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பூமிக் குண்டையே குளு குளு அறைக்குள் அமுக்கி வைத்தாலும் திருநள்ளாரில் கருவறைக்கள்ளே கல்லாக சமைந்து கிடக்கும் சனிபகவான் வீசும் கதிர்வீச்சிலிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாதாம்.

இனி, இந்தக் கதிர்வீச்சினால், அதாவது சனி பகவானின் பார்வையினால் உலக மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைகளை ஒரு பண்டாராம் பட்டியலிட்டுள்ளதை அடுத்த பதிவில் பார்ப்போம்.  

தொடரும்….

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, December 2, 2014

”கோவணம்! ” மறு பதிப்பு!

கரிசல்காட்டுக்காரனின் ”கோவணம்! ” மறு பதிப்பு!

கோவணம்!




Friday, November 7, 2014

‘அம்மா’வின் ‘பிள்ளை’களுக்கு சமர்ப்பணம்!

அரவணைக்க யாருமின்றி அனாதையாய் விடப்பட்ட சிறுவன் பசியின் கொடுமை தாளாமல் ஒரு வடையைத் திருடியதற்காக சிறுவனுக்கு சூடு போடுகிறான் கடைக்காரன். இது திரைப்படக் காட்சி மட்டுமல்ல நிஜமும்கூட. ஒரு வடைக்காக சூடுபோடுவது காட்டுமிராண்டிச் செயல் என ஒரு புறம் பச்சாதாபம் காட்டுகிற அதே வேளையில், மற்றொருபுறம் அடுத்தவன் பொருளை திருடுவது குற்றம்தானே என்கிற நியாய உணர்ச்சியையும் நாம் கொண்டிருக்கிறோம்.

ஒருவன், நமது பொருளை களவாடிவிட்டாலோ அல்லது களவாட முனைந்தாலோ, பொருளின் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப, திருட முனைபவனை திட்டுவது, விரட்டுவது, கட்டி வைத்து உதைப்பது, பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைப்பது, சில வேளைகளில் அடித்தே கொல்வது என்கிற அணுகு முறையைத்தான் நாம் கடைபிடிக்கிறோம். வந்தவன் திருடத்தான் வந்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், திருடுவதற்குத்தான் வந்துள்ளான் என சந்தேகப்பட்டாலே போதும். சட்டத்தை நாம் கையில் எடுத்துக் கொள்கிறோம்.

”சட்டத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது; குற்றவாளிகளை தண்டிக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது; மீறினால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!” என  எச்சரிக்கை விடப்பட்டாலும், நமது சொத்து - பணம் பறிபோகிற சூழலில் எதிரி பலசாலி இல்லை என்றால் சட்டத்தை நாமே கையில் எடுத்துக் கொள்கிறோம்.

சட்டத்தை நாமே கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை தண்டிக்கும் போது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டமோ அல்லது வேறு சட்டங்களோ பாய்வதில்லை; கைது நடவடிக்கை இல்லை; வழக்கில்லை; வாய்தா இல்லை; சாட்சிகள் இல்லை; விசாரணை – குறுக்கு விசாரணை ஏதுமில்லை; தீர்ப்பும் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் தண்டனை மட்டும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. அதன் பிறகு பிணையும் இல்லை; மேல் முறையீடு – சீராய்வு ஏதுமில்லை. முதல் முறை திருடனாக இருந்தாலும், தொழில் முறை திருடனாக இருந்தாலும் மக்களின் நடைமுறை இதுதான்.

மேற்கு வங்கத்தில், கால்நடைகளை திருட வந்ததாகக் கூறி வங்காள தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட கிராம மக்கள். இது அக்டோபர் 2014 இறுதியல் இந்தியாவின் வட கோடியில் நடந்தது.

இந்தியாவின் தென் கோடியில் ஒரு முதல்வர் தனது சகாக்களோடு சேர்ந்து கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கிறார். வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இவர்கள் அடித்த கொள்ளையை அன்றே பறைசாற்றியது. உழைத்துச் சேர்ப்பவன் எவனும் இப்படி செலவழிக்கமாட்டான்; அடுத்தவன் சொத்தை அபகரிப்பவனால் மட்டுமே இப்படி ஆடம்பர பகட்டை வெளிப்படுத்த முடியும் என அன்று நாம் முகம் சுளித்தோம்.
   
திருமணத்தில் வாரி இறைக்கப்பட்ட பணம் நம்மிடமிருந்து திருடப்பட்ட  பணம்தான் என்பதை அன்று நாம் உணர்ந்திருந்தால் ஒரு வேளை சட்டத்தை நாம் கையில் எடுத்திருக்கக்கூடும். என்ன செய்ய? கொள்ளையர்கள் பலம் வாய்ந்தவர்கள் ஆயிற்றே! அதனால் நீதி மன்றம் சென்றோம்.

கொள்ளடித்த பணத்தை பாதாளம் வரை பாய்ச்சி, வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள். ஒவ்வொரு வாய்தாவின் போதும் “அடுத்தது என்ன?” என்கிற ஆவலை உண்டாக்கி வழக்கை ஒரு நெடுந்தொடராக்கினார்கள். பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தி ஒரு வழியாக பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2014 இறுதியில் நெடுந்தொடர் முடிவுக்கு வந்தது. தொடரைப் பார்த்த குழந்தைகள் குமரிகளானார்கள். நெடுந்தொடரின் குமரிகளோ கிழவிகள் ஆனார்கள். இறுதியில் கதை மாந்தர்கள் கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

வடக்கே, மக்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சட்ட முறைமைகள் எதையும் கடைபிடிக்காமல் வழங்கப்படும் தண்டனையை மனதுக்குள் ஏற்றுக் கொண்டு வெளியில் கள்ள மௌனம் சாதிக்கிறோம். தெற்கே, சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து சட்டமுறைமைகளையும் கடைபிடித்து வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஓலமிடுகிறோம்; ஒப்பாரி வைக்கிறோம்; பிறகு குற்றவாளிகளுக்கு தற்காலிக பிணை கிடைத்ததற்கே அளப்பரி செய்கிறோம்; ஆர்ப்பரிக்கிறோம். ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் நாம் காட்டிய நவரசத்தைக் கண்ட சின்னத் திரை கலைஞர்கள் தற்போது தங்கள் தொழிலுக்கு போட்டியாக ஒரு பெரும் கூட்டம் இருப்பதைக் கண்டு கலங்கிப் போயுள்ளார்களாம்.
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு திருடனைக் கைது செய்யும் போது காக்கிச் சட்டைக்காரன் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கைவிலங்கோடு திருடனை இழுத்துச் செல்கிறான். வேனுக்குப் பின்னால் திருடன் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்க்கும் நாம், ‘இவனை எல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும்; அப்பத்தான் மத்தவங்களுக்கும் பயம் வரும்!’ என மனதுக்குள் எண்ணுகிறோம். ஆனால் தண்டனை பெற்ற ஒரு திருட்டுக் கூட்டத்தின் தலைவி காரில் அமர்ந்திருக்க, காக்கிச்சட்டைக்காரர்கள் காருக்குப் பின்னால் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று திருட்டுக் கூட்டத்தின் தலைவியை நாம் மலர் தூவி வரவேற்கிறோம்.

காவல் துறை மூலம் வழக்கு பதியப்படும் தொழில் முறை திருடர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்தால் அவர்களின் புகைப்படங்கள் தொடர் வண்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தொங்கவிடப்பட்டுள்ள காட்சிகளை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நமது ‘பர்சை பாதுகாக்க’ காவல் துறை விடுக்கும் எச்சரிக்கை என இதை நாம் புரிந்து வைத்துள்ளொம்.

ஆனால் இங்கே, திருடர்கள் கொள்யைடித்துக் கொண்டு ஓடும் போது சிதறும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டு திருடர்களுக்கு “ஜே!” போடுகிறோமே! திருடர்கள் சிதறவிட்டது நமது வீட்டுப் பணம் என்பது நமக்கு உறைக்காதவரை பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் ஒட்டப்பட வேண்டிய திருடர்களின் படங்கள் அரசு அலுவலகங்களை அலங்கரிப்பதை யாரால்தான் தடுக்க முடியும்?

Saturday, November 1, 2014

அப்ரண்டிஸ்களும் ஆயுட்கால அடிமைகளும்!



அன்று அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஓலமிட்டவர்கள் இன்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அயல் நாடுகளை நோக்கி ஓடுகின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடு செய்த நோக்கியாக்கள் கை நிறைய காசு பார்த்துவுடன், நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு விண்ணில் பறக்கின்றனர். அன்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பாதை போட்டு கொடுத்தான் காங்கிரஸ்காரன். இன்று அதே பாதையில் பட்டுக் கம்பளம் விரித்து பாதையை செப்பணிட்டுத் தருகிறான் பாரதிய ஜனதா கட்சிக்காரன். எண்ணூர் பாய்லர் ஆர்டரை ‘பெல்’லுக்கு கொடுத்தது சட்ட விரோதம் என சென்னையிலேயே வழக்கு தொடுக்கிறான் சீனாக்காரன். தாராள மயத்தை தடுக்காவிட்டால் தெரு நாய்கூட நம்மை நோக்கி உச்சா அடிக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? மோடி அரசு போகும் வேகத்தைப் பார்த்தால் இனி ஆலைகளும் நமக்கில்லை; ஆயுள் காப்பீடும் நமக்கில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தொழிற்சாலை ஆய்வாளர்கள், இனி ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆலை முதலாளிகள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் தற்சான்றிதழே போதும் என மகுடி ஊதுகிறார் மோடி.

மின் ஆற்றலை பயன்படுத்தாத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லிருந்து 20 ஆகவும், மின் ஆற்றலை பயன்படுத்தும் நிறுவனங்கள் 20 லிருந்து 40 ஆகவும் உயர்த்திக் கொள்ளவும் மோடி வழிவகை செய்துவிட்டார். இனி இவர்கள் முறையே 19 மற்றும் 39 ஊழியர்களை மட்டுமே நிரந்தரப் பணிகளில் அமர்த்திக் கொண்டு ஏட்டளவில் உள்ள தொழிற்சாலை சட்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும் கேள்வி கேட்பாரின்றி ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டவும் பச்சைக் கொடி காட்டியாகிவிட்டது.

இரவு நேரப் பணிகளில் பெண்களை அமர்த்திக் கொள்ளவும், கடினமான எந்திரங்களில் பெண்களை வேலையில் ஈடுபடுத்தவும் இனி தடை இல்லை என அறிவித்ததன் மூலம் இனி பெண் ஊழியர்களை வரைமுறையின்றி சுரண்டவும் பாதை வகுத்தாகிவிட்டது.

குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை அமர்த்திக்கொண்டு, அதன்பிறகு மிகை நேரப்பணி செய்தால் கூடுதல் ஊதியம்; அதன் மூலம் அதிக ஊதியம் என்கிற ஆசையை காட்டி ஏற்கனவே ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையில் மூன்று மாத காலத்திற்கான மிகை நேரப் பணியை 50 மணியிலிருந்து 100 மணி நேரமாகவும் மற்றும் சில பணிகளில் 75 மணியிலிருந்து 125 மணி நேரமாகவும் மிகைநேரப் பணி நேரத்தை உயர்த்தியதன் மூலம் உழைப்புச் சுரண்டலை  தீவிரப்படுத்தி உள்ளது மோடி அரசு. இனி ஆலைகள் அருகில் இருந்தாலும் ஆறுமாதம் கழித்துதான் வீட்டிற்குப் போகமுடியும். அன்று இந்தியர்கள் பிழைப்பு தேடி கொத்தடிமைகளாக பர்மாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் சென்றதைத்தான் இந்த சட்டதிருத்தங்கள் நினைவு படுத்துகின்றன.

ஏற்கனவே நிரந்தரத் தொழிலில் ஒப்பந்த முறையைப் புகுத்தி, உழைப்பைச் சுரண்ட வழி வகுத்தான் கதர் சட்டைக்காரன். ஆனால் உயிர் வாழ்வதற்காக குறைந்த பட்ச கூலிக்கு உத்தரவாதமாவது செய்து வைத்தான் அவன். இன்று ஆன மட்டும் பயிற்றுனர்களை (Apprentice) பயன்படுத்திக் கொள்ள வழி வகுத்துவிட்டான் காவித்துண்டுக்காரன். இனி உழைப்பாளிகள் அனைவரும் செக்கில் பூட்டப்பட்ட அப்ரண்டிஸ் அடிமைகள்கள்தான். அடிமைகள் துவண்டு போகும் போது அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்க அவ்வப் பொழுது நாவை நனைத்துக் கொள்ள அவர்களுக்கு ஸ்டைபண்டு கொடுப்பார்கள். அதைக்கூட அரசாங்கத்திடமிருந்து முதலாளிகள் ரீபண்டு செய்து கொள்ளலாம். இனி அப்ரண்டிஸ்களுக்கு கால வரையறை ஏதும் கிடையாது. அவர்களின் ஆயுளே இனி பயிற்சிக்கான கால வரையறையாக அமையும். பிறகென்ன? ஈசி சேரில் முதுகை சாய்த்து முட்டைகோஸ் பக்கொடாவை கொரித்துக் கொண்டே “ஐ ஆம் எ பாரத் பாய்! மம்மி, நான் வளர்கிறேனே!” என எலும்பு துருத்தி நரம்பு புடைக்கும் அப்ரண்டிஸ்களை இனி சின்னத் திரையில் காணலாம்.

Tuesday, October 28, 2014

தொடப்பக் கட்டையும் தூய்மை இந்தியாவும்!



விரைந்து செல்லும் வாகனங்களால் சட்டெனப் பறந்து மறையும் இலைச் சரகுகள் அக்டோபர் 2 அன்று மட்டும் எப்பொழுதும் தூய்மையாக காணப்படும் டெல்லி பாராளுமன்ற வளாக சாலைகளிலும், சென்னையின் ராஜ்பவன் சாலைகளிலும் அகல மறுத்து அடம் பிடித்தன. காய்ந்த பின் உதிரவேண்டிய பச்சை இலைகள்கூட அன்று சரகாய் மாறி சாலைகளை அலங்கறித்தன. மோடியின் துடைப்பம் மயிலிரகாய் சரகுகளை இதமாய் வருடியபோது “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என முணுமுணுத்தவாறு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மெய்சிலிர்த்து குதூகலித்தன சரகுகள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,  மக்களிடம் கொள்ளை நோயை உண்டு பண்ணும் பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும், ஆலைகளின் இரசாயணக் கழிவுகளும், ஊராட்சி - நகராட்சிகளின் கக்கூசு – சாக்கடைக் கழிவுகளும் மலை மலையாய்க் குவிந்து கோபுரம் கட்டி வாழும் போது அவைகளைச் சீண்டுவதற்கு திராணி இன்றி, செடி - கொடி - மரங்களுக்கு எருவாய், பயிர்களுக்கு உரமாய், ஏன் எதிர்கால சந்ததிக்கு நிலக்கறியாய் மாறி பன்முகப் பயன்பாட்டைத் தரும் தம்மை, ஏன் இவர்கள் ஊர்கூடி ஒழிக்க நினைக்கிறார்கள் என்கிற ஐயம் மட்டும் சரகுகளுக்குள் எழுந்த வண்ணம் இருந்தன.

வீட்டுக் குப்பையைக் கூட்டுவதற்கே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் கோமான்களும் சீமாட்டிகளும் தெருவைக்குகூட்ட துடைப்பம் ஏந்தி  “வாருங்கள்! பாரதத்தை தூய்மைப்படுத்துவோம்!” என வானதியாய்-லட்சுமியாய் வடிவெடுத்து மெரினாவை மென்மையாய் வருடுவதைப் பார்க்கும் போது இவர்கள் “சொல்வதெல்லாம் உண்மை” தானா என்கிற ஐயம் உயிரற்ற சரக்குகளுக்கே எழும் போது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் எழாதா என்ன?

இந்த பேஷன் ஷோ பெரேடில் ஒய்யாரம் காட்ட தேச பக்தர்கள் துடைப்பக் கட்டையோடு பூங்காக்களை மொய்க்கிறார்கள்; பீச்சுகளை மேய்கிறார்கள். வேலூர் கோட்டைப் பூங்காவில்  வி.ஐ.டி யின் இளவலும், ஐதராபாத் சினிமா ஸ்டுடியோவில் சிரஞ்சீவியும் இதில் முந்திக் கொண்டனர்.

இதே நிலை நீடித்து பேஷன் ஷோவில் எதிர்க்கட்சிக்காரன் பரிசு பெற்றுவிட்டால் அது முதலுக்கே மோசம் என்பதால் இது குறித்து நடுவண் அரசின் அமைச்சரவை உடனடியாகக்கூடி ஆலோசித்ததாம். குப்பை கூட்டுபவர்களுக்கு படிப்பறிவும் போதாது; திறமையும் போதாது எனவே குறைந்த பட்ச கல்வித்தகுதியுடைய திறமையானவர்களைக் கொண்டு குப்பை கூட்டினால் மட்டுமே இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியும் என முடிவெடுத்து குப்பை மேலாண்மை குறித்த படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் இந்தப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமாம்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் ஒவ்வொரு சாதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே வேலையில் சேருவதற்கான ஆணையும் கையோடு வழங்கப்படுமாம். பாரத தேசத்தை குப்பையற்ற தேசமாக மாற்றும் வல்லமை 60 லட்சம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என ராஜ்நாத் சிங் கண்டறிந்துள்ளதால்தான் இந்த வேலையை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதோடு அதைக் கட்டாயப் பணியாகவும் அறிவித்துள்ளார்களாம். மீறுவோர் நாடற்றவர்கள்களாக அறிவிக்கப்பட்டு பாரதத்தை விட்டே விரட்டப்படுவார்களாம்.

இந்த வேலை வாய்ப்பில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என நடுவண் அரசு அறிவித்த போது அதற்கு இதர பிற்பட்ட வகுப்பினரிமிருந்து (OBC) கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாலும் குப்பை கூட்டும் இந்தப் பணி புனிதமானது என்பதாலும் விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்புகள்  பகிர்ந்து அளிக்கப்படும் என நடுவண் அரசு தெளிவு படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனவாம். அனைத்து சாதிகளிலும் உள்ள பெண்களுக்கும் இந்த வேலை வாய்ப்பில் 50 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர்  இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்ப சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுமாம். இளைஞர்கள் இல்லாத குடும்பங்களிலிருந்தும் ஒருவர் கட்டாயமாக இந்தப் பணியை செய்ய வேண்டுமாம். அவர்கள் பிற பணிகளில் இருந்தாலும்கூட டெப்புடேஷனில் வந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டுமாம்.

தெருவோர சாக்கடைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி – நகராட்சி, ரயில் நிலைய – பேருந்து நிலைய கழிவறைகளை கழுவுதல், பாதாள சாக்கடை கழிவு நீர்த்தொட்டிகளில் மூழ்கி அடைப்புகளை அகற்றுதல் போன்ற வேலைகளைச் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதம் முறையான பயிற்சி அளிக்கப்படுமாம். ஓராண்டு வேலை செய்த பிறகு இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்களாம். இவர்கள் விட்டுச் சென்ற பிறகு, இப்பணியை தொடர மேற்கண்டவாறு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்களாம்.

விலைவாசி உயர்வும் வெண்டைய்க்காயும்!



பதிவெழுதி ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் தட்ப வெட்ப நிலைகளில், அரசியல் தளங்களில், ஆட்சியாளர்களின் கொள்கைகளில், சமூக நடப்புகளில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மேற்கண்ட மாற்றங்கள் குறித்து அன்றாடம் ஒரு பதிவு எழுதி இருந்தால்கூட குறைந்தது ஒரு முப்பது பதிவுகளாவது எழுதி இருக்க முடியும். என்ன செய்ய! கணினிக் கோளாறு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால்  கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சேதாரம் அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகளைப் போல கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது முடுக்கிவிடப்பட்டதா என்கிற கேள்வி என்னுள் மட்டுமள்ள காஷ்மீரத்தின் சேதாரத்தை உற்று நோக்கியவர்கள் அனைவருக்குள்ளும் எழுந்திருக்கும் என்றே கருதுகிறேன். காஷ்மீர் சேதாரத்திற்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்க முனைந்த பல்கலைக்கழக பேராசியர்கள் மீது பீகாரில் சங்பரிவார ‘தேசபக்தர்கள்’கள் தொடுத்த தாக்குதலின் போது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது மட்டுமல்ல ‘பாரதத்தின்’ ‘சகோரத்துவ’ லட்சணமும் பளிச்சென வெளிப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தும் செல்வந்தன் வெளியே வரும் போது வாசலில் தட்டேந்தும் பிச்சைக்காரர்களின் தட்டில் வீசப்படும் சில்லரைகள் போலத்தான் சியாச்சின் சென்று திரும்பிய குஜராத்தின் முன்னாள் கோமகனும் பாரதத்தின் இந்நாள் பிதாமகனும் கொஞ்சம் சில்லரைகளை பனிமலையின் வாசலிலும் வீசிவிட்டு வந்துள்ளார்.

வடக்கே பனிமலை மட்டுமல்ல; சுனாமியால் கொத்துக் கொத்தாய் மக்கள் தென் கோடியில் அன்று மாண்ட போதும், அதைத் தொடர்ந்து தானே புயல் சீற்றத்தால் தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தலைமுறை சேதாரம் ஏற்பட்டபோதும்கூட ‘இந்தியாவின்’ லட்சணமும் இப்படித்தான் இருந்தது.

அக்டோபர் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் இந்த மழை குறைவு வரும் காலங்களில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே “வூட் வூட்“ புயலும் வந்தது; விசாகப்படடிணத்தை புரட்டிப் போட்டது. வழக்கத்தைப் போலவே நட்டக் கணக்கும் போடப்பட்டு அடுத்த புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகிவிட்டனர் ஆட்சியாளர்கள்.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கூடுதல் மழை என ரமணன் வாசிக்கும் அறிக்கை மட்டுமே நமக்கு மழை பற்றிய மதிப்பீடைத் தருகிறது. ஆனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போதிய மழை இன்மையால் விவசாய வேலைகள் முடங்கிப் போய் விவசாயிகள் மாடுகளை மேய்த்துக் கொண்டு எஞ்சிய நேரத்தில் தாயம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது? வரும் நவம்பரிலும் மழை பொய்த்துப் போனால் இம்மாவட்டங்கள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

‘அக்கினி பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும் வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவார்கள் ஆட்சியாளர்கள். இப்போது பெட்ரோல் - டீசல் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலைதான் இதற்குக் காரணம் என்றாலும் விலை குறைப்புக்கு நாங்கள்தான் காரணம் என ஒரு பக்கம் மார் தட்டுகிறார்களே; பெட்ரோல் - டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைய வேண்டுமே என கேள்வி கேட்டால் கள்ள மௌனத்தையே பதிலாகத் தருகிறார்கள் தமிழிசைகள். என்ன செய்ய? ”மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்” என சண்ட மாருதம் செய்யும் தமிழிசைளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!