Sunday, February 2, 2014

‘திருடர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்து!’

கர்பினிகள் – பச்சிளங் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மக்கள் அதிகமாக முற்றுகையிடும் இடம் மருத்துவ மனைகளாகத்தான் இருக்கின்றன. காசு இல்லை என்றால் நாட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம்; போக்கு வரத்து செலவுக்கு கொஞ்சம் காசிருந்தால் அரசு மருத்துவ மனைகள்; ஓரளவுக்கு செலவு செய்ய முடியும் என்றால் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனைகள்; எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு வசதி இருந்தால் கார்பரேட் மருத்துவ மனைகள் என மக்கள் மருத்துவ மனைகளை அன்றாடம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
புதிய நோயாளிகள் மட்டுமல்ல பழைய நோயாளிகளே மீண்டும் மீண்டும் மருத்துவ மனைகளை நாடிச் செல்வது ஒரு வழக்கமாகவே மாறி வருகிறது.
 
அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் யோகா & நேச்சுரோபதி என அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகையான மருத்துவ முறைகள் இருக்கும் போது எலக்ட்ரோபதி, மலர் வைத்தியம், ரெய்க்கி, அக்கு பிரஷர், அக்கு பங்க்சர்,  காந்த சிகிச்சை, தொடு சிகிச்சை (touch healing), செவி வழி தொடு சிகிச்சை, பிரானிக் ஹீலிங், தீ சிகிச்சை, நீர் சிகிச்சை (water theraphy) சுவை சிகிச்சை, உணவே மருந்து என பலவண்ண மருத்துவ முறைகள் நாள் தோறும் முளைத்த வண்ணம் உள்ளன.
 
இவை தவிர மூட்டு வலிக்கு முடக்கத்தான், கீல் வாதத்திற்கு வெள்ளெருக்கு, கிட்னி ஸ்டோனுக்கு வாழைத்தண்டு என வகை வகையான நமக்குத்  தெரிந்த கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என எதையும் நாம் விட்டு வைப்பதில்லை.
 
மண்ணோ - மாத்திரையோ அதைப்பற்றி கவலை இல்லை; ‘பிய்யைத் தின்றால் பித்தம் தீரும்!’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்; அதையும் தின்னத் தயாராகிவிட்டால் இதை அறிவுடமை என்பதா அல்லது அறியாமை என்பதா? என்று கேட்பதைவிட நோயின் பிடியிலிருந்து மீண்டால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்  என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் இந்த பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு ஒரு சாரார் இராசிக் கற்களையும், சக்திக் கவசங்களையும் சந்தைப் படுத்தி வருகின்றனர்.  மற்றொரு சாராரோ பரிகாரங்களையும், தியானங்களையும் பரிந்துரைக்கின்றனர்.
 
இத்தகைய சூழலில்தான் எளிய அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் செலவு வைக்காத மருத்துவம் என்பதால் ஒரு சிலர் ஹோமியோபதி மருத்துவத்தை நாடுகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்த ஒரு சிலர் இம்மருத்துவத்தை பிரபலப்படுத்த இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதோடு மருத்துவ இதழ்களையும் வெளியிடுகின்றனர். அத்தகைய முயற்சியில் தஞ்சாவூரிலிருந்து கா.அரங்கராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “இயக்கயியல் மருத்துவம்” என்கிற ஹோமியோ & சமூக நல இரு மாத இதழ் ஒன்றை சனவரி 2014 ல் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
ஹோமியோபதி மருத்துவத்தை இவ்வுலகுக்கு அளித்த சாமுவெல் ஹானிமன் அவர்களைப் பற்றியும், ‘தொற்று நோய்க்கு தடுப்பு ஊசி அவசியம்தானா?’, ‘நோய்க்கு யார் காரணம் மனிதனா? மருத்துவமா?’, உடல் முழுக்க நீரில் மூழ்கிக் குளிப்பதே குளியல் என்கிற புதிய பரிமானத்தை விளக்கும் ‘எது குளியல்?’, ‘வயிற்றில் பூச்சித் தொல்லை’, ‘சுகர் ஒரு மாய வலை’, ‘நோய்க் கூறுயியல்’, ‘சுகருக்கு மருந்திருக்கா?’, ‘இதய நோய்க்கு இனிய தீர்வு’, ‘உயர் இரத்த அழுத்தம்’, ‘எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி’ உள்ளிட்ட கட்டுரைகளில் ஹோமியோபதியின் சிறப்புகளை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அவ்விதழில் உறுத்தலாக இருந்த ஒரு பெட்டிச் செய்தியே  இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.
 
“ஒரு சிலருக்கு திருடுவதில் மிகுந்த ஆர்வம். அவர்களை எவ்வளவு திருத்தினாலும் திருந்த மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்து” – அபிசிந்தியம் (absinthium). இதுதான் அந்தப் பெட்டிச் செய்தி.
 
இதைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? திருட்டு ஆர்வத்தை ஒழிக்க சட்டங்கள் தேவையில்லை. காவல் துறை தேவையில்லை. போதனைகளும் உபதேசங்களும் தேவையில்லை. அபிசிந்தியம் கொடுத்தால் போதும் திருடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்றல்லவா தோன்றக்கூடும்!
 
ஹோமியோபதி மருத்துவ முறையில் கிளப்டோமேனியா (Kleptomania) என்றொரு மனக்குறி உண்டு.  இம் மனக் குறிக்கு சுமார் 31 ஹோமியோ மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பொருளாதார ஆதாயம் மற்றும் தனது சொந்தத் தேவைக்கு என்றில்லாமல் ஒரு பொருளை திருடுவதற்கு ஒருவரிடம் ஏற்படும் தூண்டுதலை அல்லது  உந்துதலை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையைத்தான் கிளப்டோமேனியா என்கிறார்கள். பொருள் சிறிதேயானாலும் திருட வேண்டிய பொருளை திருடி விட்டால் அலாதி இன்பம் அவர்களுக்கு. இது மூளை செல்களில் ஏற்பட்டுள்ள இரசாய மாற்றங்களின் விளைவால் உருவாகும் உளவியல் சார்ந்ததொரு மன பிறழ்சி. இதனை பொருளாதார ஆதாயத்திற்காகவும் மற்றும் தனது சொந்தத் தேவைக்காகவும் தெரிந்தே திருடுவோரின் மனநிலையோடு பொருத்திப் பார்ப்பது அபத்தமாகிவிடும்.
 
பெல்லோடோனா, கல்காரியா கார்பானிக்கா, பல்சட்டில்லா போன்ற பன்முகத் தன்மை கொண்ட மருந்துகள் முக்கிய மருந்துகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள போது மிகக் குறைந்த அளவே முக்கியத்துவமுடைய அபிசிந்தியம் மருந்தை திருடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களை நல்லவர்களாக மாற்றும் அற்புத மருந்தாக சித்தரிப்பது ஹோமியோபதியை தவறாகப் புரிந்து கொள்வதற்கு வழி வகுக்கும்.
 
மேலும் கிளப்டோமேனியா மனநிலை உள்ளவர்களுக்கு வேறு சில நோய்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இம்மனக்குறியை கருத்தில் கொண்டு அந்நோய்க்கான மருந்தை தேர்வு செய்து கொடுத்தால் அம்மருந்து சிறப்பாக வேலை செய்யும். இது மருந்தை தேர்வு செய்வதில் மனக்குறிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்கிற ஹோமியோபதி விதியோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
எது சிறந்த மருத்துவம் என்பதற்கு மேலாக எத்தகைய மருத்துவக் கொள்கை இன்றைக்குத் தேவை என்பதே மக்களை நோய்ப்பிடியிலிருந்து விடுவிக்க உதவும். இது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.
 
தொடர்புடைய பதிவுகள்:
  • அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!
  • பார்த்திபன் கனவு!
  • நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!
  • இதழ் முகவரி:
  • ஆசிரியர்
  • இயக்கயியல் மருத்துவம்
  • 15, பிரியா காம்ளக்ஸ்
  • நவநீதபுரம் அஞ்சல்
  • மணிமண்டபம் அருகில்
  • தஞ்சாவூர்
  • அலைபேசி: 8903563505
  • iyakkiyal@gmail.com

  • No comments:

    Post a Comment