Monday, April 28, 2014

டம்மி பீசு!



”குடியாத்தம் நகராட்சிக்கு உள்பட்ட 3,4,5வது வார்டுகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததால் குடிநீர் வழங்கக் கோரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தலைமையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனராம். அதனால் குடியாத்தம் நகரில் பரபரப்பு  ஏற்பட்டதாம். இம்மறியலில் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.ஜி. பழனி, தேவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்களாம்.

அப்பகுதி மக்கள் கோரியதையடுத்து, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்குமாறு தலைவர் அமுதா சிவப்பிரகாசம் அதிகாரிகளிடம் கூறினாராம். அவர்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் 3 வார்டுகளின் மக்களுடன் சாலை மறியல் ஈடுபட்டாராம் தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன், பொறியாளர் ஜி. உமாமகேஸ்வரி, டிஎஸ்பி . விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்து அந்த வார்டுகளுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டதாம்.

பொதுமக்களுக்கு இடையூறு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், 3 நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்களாம்”. 

இப்படி ஒரு செய்தி 16.04.2014 அன்றைய தினமணியில் வெளிவந்தது.

மக்களின் கோரிக்கையை நகர மன்றத் தலைவர் அதிகாரிகளிடம் கூறினாராம் ஆனால் அதிகாரிகள் நிறைவேற்றவில்லையாம் அதனால் மக்களோடு சேர்ந்து சாலை மறியல் செய்தாராம். வரும் மாதங்களில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியாது என்பதால் அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு இவர் மக்களுக்காக இருப்பது போல நாடகமாடுகிறாரா? இல்லை உண்மையிலேயே இவர் அதிகாரம் ஏதுமற்ற டம்மி பீசா?

ஊராட்சி-நகராட்சி என்றால் தீர்மானங்கள் போடலாம். சட்டமன்றம்-பாராளுமன்றம் என்றால் சட்டமியற்றலாம். மாறாக இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களையோ அல்லது இவர்கள் இயற்றிய சட்டங்களையோ இவர்களால் நடைமுறைப் படுத்த முடிகிறதா? தீர்மானங்களை-சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் முழுதும் அரசுத் துறை அதிகாரிகளிடம் குவிந்து கிடக்கிறபோது, “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், குடிநீர் உள்ளிட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்!” என பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை இப்படி வாக்குறுதிகள் கொடுத்துதுானே இவர்கள் வெற்றி பெறுகின்றனர். தாங்கள் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற்றால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பித்தானே மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால், பதவியில் அமர்ந்த பிறகு நிதி பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை, அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் என காரணங்களைக் காட்டி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக தொல்.திருமா முதல் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் புலம்பித்திரிகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கலாமே ஒழிய அவர்களால் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக நிறைவேற்றுகிற அதிகாரத்தை இந்த ஆட்சி முறை ஒரு போதும் வழங்காது. அதிகாரம் ஏதுமற்ற இத்தகைய டம்பி பீசுகளுக்கு வாக்களித்துவிட்டு ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக கைவிரல் மையைக் காட்டி “இது ஆளு’மை!” என பெரு’மை’ப் பட்டுக்கொள்கிறோம்.



‘மை’ வைத்ததையே பெருமையாகப் பேசும் நாம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று என்றைக்காவது யோசித்ததுண்டா? வெற்றி பெற்றுச் செல்பவர்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டாலோ அல்லது செயல்படாமல் முடங்கி விட்டாலோ அல்லது கட்சி மாறினாலோ அல்லது இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அல்லது குணக்கேடராக மாறினாலோ அல்லது ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அவரால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்றாலோ நாம் வேடிக்கைதானே பார்க்கப் போகிறோம்.

மாறாக அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பாகவே கூட மக்கள் பிரதிநிதிகள், மக்களால் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ அவர்களுக்கு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது பற்றியோ, பதவிக்காலம் முடியும் முன்பாகவே புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்பது பற்றியோ, பாதை விலகிப் போகும் பிரதிநிதிகளைப் பொருத்தவரையில், அவர்களை மூட்டைக் கட்டி வீட்டுக்கு அனுப்பும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும் என்பது பற்றியோ, அப்படிப்பட்ட ஒரு சட்டம் நமது நாட்டில் கிடையாது என்பது பற்றியோ சிந்திக்காமல் டம்மி பீசுகளுக்கு மை வைத்ததையே கடந்த 66 ஆண்டுகளாகப் பெருமை பேசி பெருமை பேசி நாமும் டம்மி பீசாகி விட்டோமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

தொடர்புடைமய பதிவுகள்:
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

 

No comments:

Post a Comment