Saturday, July 19, 2014

நெருப்பைக் கக்கும் டிராகன்களை நேரில் பார்க்க வேண்டுமா?

முசோலினி மற்றும் ஹிட்லரை பாசிஸ்டுகள் என்று சொன்னபோது அது நமக்கு விளங்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராசபக்சேவை பாசிஸ்ட் என்று சொன்ன போதுதான் பாசிஸ்ட் என்றால் என்ன என்பதை நம்மால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. 

தொடர் வண்டிக் கட்டணம் பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் குறித்த பிரச்சனைகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடுகள் பற்றிய விவாதங்களில் ஊடகவியலாளர்களும் மாற்றுக்கட்சியினரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில சொல்ல முடியாமல் மூஞ்சி தொங்கிப்போன சங்பரிவாரத் தலைவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்த நடுவண் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமசுகிருத வாரம் கொண்டாட அரசு சுற்றறிக்கை அனுப்பியது குறித்த விவாதங்களில் பங்கேற்கும் எதிர் அணியினரை பயங்கர வெறிகொண்டு மூர்க்கத்தனத்தோடு எதிர்க்கின்றனர்.

18.07.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவதாதத்தின் போது பாரதிய ஜனதாகட்சியைச் சேர்ந்த ராசா என்பவர் கடுஞ் சீற்றத்துடன் "இந்தியை எதிர்ப்பவன் தேசத்துரோகி" என தனது தோழமைக்கட்சியான ம.தி.மு.க வின் அந்திரிதாசு மீது  பாய்ந்த காட்சியைப் பார்த்தபோது  எனக்கு சற்றே நடுக்கம் ஏற்பட்டது. நல்ல வேளை. விவாதம் அந்த நேரத்தில் முடியும் தருவாயில் இருந்ததால் அந்திரிதாசு தப்பித்தார்.

அதோபோல இந்தியாவில் இனி ஒருவன் தன்னை தமிழன் என்றோ, தெலுங்கன் என்றோ, மலையாளி என்றோ, மராட்டியன் என்றோ, காசுமீரி என்றோ, வங்காளி என்றோ சொல்லிக் கொள்ளக்கூடாது. அப்படி எந்த ஒரு இனமும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவில் இருப்பது ஒரே இனம்தான். அது இந்தியன் என்கிற இனம் மட்டுமே. இதற்கு எதிராக எவன் பேசினாலும் அவனும் தேசத்துரோகிதான் என்பதுதான் சங்பரிவாரத் தலைவர்களின் இனம் குறித்த முடிவு.

நெருப்பைக் கக்கும் டிராகனை நான் நேரில் பார்த்ததில்லை. இனி அந்தக் குறை எனக்கு இல்லை. தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கும் சங்பரிவாரத் தலைவர்களைப் பார்த்தாலே போதும். 

1 comment:

  1. சிறந்த பகிர்வு
    தொடரட்டும்

    ReplyDelete