Tuesday, August 12, 2014

கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

100 கோடி பேருக்கு மேல் வாழக்கூடிய இந்திய நாட்டில் வெறும் 14,135 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை தங்களது தாய்மொழி என அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், வடக்கு தெலிங்கானா, தெற்கு இராஜஸ்தான், நாக்பூர், மற்றும் ஹரித்துவார் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க ஒரு சிலர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளோர்:

சித்பூர் மாவட்டம் (உத்தரப்பிரதேசம்) : 550
யுன்னாவோ (உத்தரப்பிரதேசம்)      : 334
லக்னோ (உத்தரப்பிரதேசம்)          : 307
கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்)         : 300
ஹரித்துவார் (உத்தரகாண்ட்)         : 288
டெல்லி                              : 279
பெங்களூரு                          : 235
அடிலாபாத் (தெலிங்கானா)          : 134

1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிரதேசத்துக்கு கிழக்கே உள்ள மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னை மாகாணத்தில் 315 பேர் சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக 1921 ஆண்டு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதன் பிறகு சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் 1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் என ஏற்ற இறக்கங்கள் கண்டுள்ள ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. ஒரு வேளை இது புள்ளி விவரக் கணக்கெடுப்பில் நேர்ந்துள்ள தவறாக இருக்குமோ என ஒரு சிலர் கருதக்கூடும். உடனடி அரசியல் தேவைகளுக்காக இவர்கள் அடிக்கடி தாய்மொழியை மாற்றிக் கொள்வதே இந்த ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம்.

மேற்கு இந்தியாவில் வாழும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பேசும் ‘பில்’ (BHIL) மொழியை தங்களது தாய் மொழி என அறிவித்ததால் 1991 மற்றும் 2001 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் பில் மொழிதான் தங்களது தாய்மொழி என் அறிவித்ததற்குக் காரணம் ஜார்கண்ட்டைப் போல தங்களுக்கு ஒரு தனி மாநிலம் தேவை என்பதற்காகத்தான்.

இந்திக்கு அடுத்தபடியாக பேசப்படும் வங்காளி மொழி பேசுவோரின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அம்மாநில மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் குடியேறிய வங்காள தேசத்தினர் தங்களது தாய்மொழி உருதுவாக இருந்த போதிலும் “இந்தியக் குடியுரிமை“ கிடைக்கும் என்பதற்காக அவர்கள் தங்களது தாய்மொழி வங்காளம் என்று அறிவித்ததே  மேற்கண்ட எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம். இது கடந்த முப்பது ஆண்டு கால விவரக் கணக்கு.

கௌரவத்திற்காகவும், இந்திய அரசமைப்பில் சமஸ்கிருதத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருப்பதனாலும் ஒரு சிலர் தங்களது தாய்மொழி சமஸ்கிருதம் என போலியாக அறிவித்துள்ளனர். இல்லை எனில் சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை மேலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் இன்னமும் சமஸ்கிருதம் பேசப்படுவதாக ஒரு சிலர் உணர்வதால்தான் (feel) இம்மொழி செல்வாக்கு செலுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத கிராமம் என வர்ணிக்கப்படும் மட்டூர் (mattur) கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமஸ்கிருதத்தை தங்களது தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.


வெறும் 0.000014135 சதவீதம் பேரின் தாய்மொழியாக இருக்கக்கூடிய சமஸ்கிருதம் எவ்விடத்திலும் எப்பொழுதும் இல்லாத ஒரு மொழியாக இருந்த போதிலும், அது நமது கருத்துக்களில், எண்ணங்களில் நம்முடன் வாழ்கிறது. அம்மொழியோடு ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பு இருக்கிறது. புராண - இதிகாசங்கள் மீதும், சடங்குகள் - சம்பிரதாயங்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் நீடிக்கும் வரை சமஸ்கிருதம் செல்வாக்கு செலுத்தவே செய்யும்.

வறட்சி - புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் விளைவால் ஏற்படும் கேடுகளிலிருந்தும், அரசியல் -  பொருளாதார – பண்பாட்டுச் சூழலை கட்டுப்படுத்தும் சமுதாயச் சக்திகள் ஏற்படுத்தும்  கேடுகளிலிருந்தும் மந்திரச் சடங்குகள் செய்வதன் மூலம் தனக்குத் துன்பங்கள் நேராதிருக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அடிமை உடைமைச் சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து  மந்திரங்கள் சமய வடிவில் பிரதிபலிப்பதாலும், இந்தியாவைப் பொருத்தவரை வேத - மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், மந்திரம் ஓதுவது ஒரு முழுநேரத் தொழிலாக இருப்பதாலும் இறப்பிற்குப் பிறகும் மந்திரங்கள் மனிதனை துரத்திக் கொண்டிருக்கின்றன.

அதனால்தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக யாரும் ஏற்றுக் கொள்ளாமலேயே அல்லது சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லாமலேயே பூமிபூஜைகளிலும், கிரகப்பிரவேசங்களிலும், கணபதி ஹோமங்களிலும், பூப்புனிதநீராட்டு விழாக்களிலும், கல்யாணம் – கருமாதி – திதிகளிலும், கோவில்களில் அன்றாட வழிபாடு மற்றும் பரிகாரப் பூஜைகளிலும் சமஸ்கிருதம் கோலோச்சுகிறது.

சமஸ்கிருதம் மக்களின் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை அறிவால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. இயற்கைக் கேடுகளிலிருந்தும், சமூகக் கேடுகளிலிருந்தும் மனிதனை பாதுகாக்கக்கூடிய, மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு சமூகம் அமையும் பட்சத்தில் சமய வடிவில் பிதிபலித்து நிற்கும் சடங்குகளும் மந்திரங்களும் மறைந்தொழியும். அப்பொழுது மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும். இதற்கு தனிமனித செயலைவிட ஒரு சமுதாயச் செயலே இன்றைய தேவையாக இருக்கிறது.


(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: THE HINDU, Chennai. 10.08.2014)

தொடர்புடைய பதிவுகள்:

9 comments:

 1. நல்ல பதிவு. ஆனால் சில திருத்தங்கள். சமஸ்கிருதத்தை முதன் மொழியாக பேசுவோர் இந்தியாவில் மிகவும் குறைவு. RSS போன்ற இயக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊர்களில் இவற்றுக்கு பேச்சு மொழியாக்க முனைந்தது, ஆனால் காலப் போக்கில் அவற்றை பேசுவார் இல்லாமல் போனதே உண்மை. இந்தியாவில் சமஸ்கிருதத்தை முதன் மொழியாக பேசுவோரை விட ஆங்கிலத்தையே தாய்மொழியாக பேசுவோரின் தொகை மிக மிக அதிகம் என்பதே உண்மை.

  சமஸ்கிருதம் எந்தளவுக்கு வாழும் மொழி என்றால், கோமாவில் கிடக்கும் ஒருவருக்கு செயற்கையாக இருதயத்தை துடிக்க வைத்து உயிர்வாழ வைப்பது போன்றே அது வாழும் மொழியாக்கிள்ளார்கள்.

  மற்றபடி வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் உருது பேசுவதில்லை. வங்கதேசத்தில் உருது பேசுவோரின் தொகையானது இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோரின் தொகையை விட கம்மி. வங்கதேசத்தவர்கள் வங்காள மொழியை பேசுவதோடு, வங்காள மொழிப் பற்று மிக்கவர்கள், அதனால் தான் உருது மொழி திணிப்பை எதிர்த்து மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையும் பெற்றனர்.

  பில் எனப்படும் வில்லாடி மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். வில்லாடி மொழி பேசுவோர் தமது மொழி எது வட்டார வழக்கு எது என அறியாமல் இருந்ததே. இன்று வட்டார வழக்கை மொழியாக கூறாமல் தமது மொழி எது என்பதை அறிந்துள்ளார்கள். ஒரு கோடிக்கும் அதிகமானாரோல் அது பேசப்படுகின்றதோடு. ஜார்க்கண்டை விட பெரிய நிலப்பரப்பில் அவர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள்.

  இதே போல கோண்டி மொழி எனப்படும் திராவிட மொழியை பேசுவோரின் தாயக நிலமும் மிகப் பெரியது. உண்மையில் இந்த இரு பழங்குடி இன மக்களுக்கு மொழி வாரி மாநிலம் உருவாக்கி இருக்கப்படல் வேண்டும், ஆனால் அதனை கண்டும் காணாமல் விட்டதன் விளைவு அங்கு வளர்ச்சி ஏற்படாமல் நக்சல்பாரி இயக்கங்களும் தோன்றின.

  பல மொழிகளான அவாதி, பாகேலி, பந்தேளி உட்பட 18 மொழிகளை ஒரே மொழியாக கணக்கு காட்டி இந்தி எனப்படும் காரி போலி தான் இந்தியாவின் தேசிய மொழியாக நிறுவ முயன்றார்களே அது தான் உண்மையான அயோக்கியத் தனமே.

  தமிழகத்தில் மதங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் பிற மொழியை குறைத்து தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை தமிழக அரசியல் ஆட்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நிலை நிறுத்த வேண்டும். அதைச் செவ்வனே செய்தாலே நம் மொழி என்றும் வாழும் மொழியாக செம்மொழியாக தொடரும்.

  ReplyDelete
  Replies
  1. உருது குறித்து இந்து நாளேட்டில் வந்த செய்தியின் அடிப்படையில்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். உருது பற்றி தாங்கள் கொடுத்திருக்கும் திருத்தம் ஏற்புடையதே.

   தமிழ் செம்மையாக வாழவேண்டுமானால் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவும் தொழில் மொழியாகவும் (professional language) வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

   பல புதிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

   Delete
 2. //மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும்//

  மந்திர தந்திரங்களை நம்பும் நம் மக்கள் திருந்த வேண்டும்.

  இப்போதைக்குத் திருந்துவதாகத் தெரியவில்லை.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் மந்திர தந்திரங்களின் மீதான நம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

   Delete
 3. ஆங்கில பயிற்சிக்காக ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தேன்

  எதற்காக ஆங்கிலம் கற்க வந்தேன் என்று கேட்டதற்கு

  அலுவல் மொழியான காரணத்தால்
  ஆகார மொழியானதன்றோ
  ஆதலால்
  ஆகாததென்றாலும்
  ஆகட்டும் பார்கலாமென வந்தேன்

  என பதிலளித்தேன்

  ஆம் தாங்கள் கூறியது போல் நமது மொழி அலுவல் மொழியானால் நாமும் சிறப்புறுவோம்

  http://velvetri.blogspot.in/2014/08/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. நமது மொழி அலுவல் மொழியாக மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஆகார மொழியாகவும் (professional language) வளர்த்தெடுத்தால் மட்டுமே நாமும் சிறப்புறுவோம்; நமது மொழியும் சிறப்புறும்.

   Delete
 4. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete

There was an error in this gadget