Saturday, July 25, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

பார்சிக்களால் நேர்ந்த தீண்டாமை…..
அம்பேத்கர் 1913லிருந்து 1917 வரை நியூயார்க்கில் படித்துவிட்டு லண்டன் சென்கிறார். 1918ல் லண்டனில் படிப்பை முடிக்க முடியாமல் இந்தியா திரும்புகிறார். இந்தியா வந்த பிறகு அவருக்கு பரோடாவில் வேலை கிடைக்கிறது. பரோடாவில் எங்கு தங்குவது என்கிற பிரச்சனையை சந்திக்கிறார். விஷிஸ் என்ற இந்து ஓட்டலில் தங்க வேண்டுமானால் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டும். அதை அவர் விரும்பவில்லை. இந்து நண்பர்கள் வீட்டிற்குச் சென்று தங்கலாம் என்றால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாகிவிடும். அதனால் ஒரு பார்சி விடுதியில் தங்குகிறார். அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்ட இந்து என்பதால் அவர் பார்சி விடுதியை அசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறி ஒரு டஜன் பார்சிக்கள் கையில் கம்புகளுடன் வந்து அம்பேத்கரை மிரட்டி காலி செய்ய வைக்கின்றனர்.

எங்கு செல்வது என்று தெரியாமல் தனது கிறிஸ்தவ நண்பரிடம் உதவி கேட்கிறார். அவரது மனைவி பிராமணர் என்பதால் தனது வீட்டில் தங்கவைப்பதற்கு அந்த கிறிஸ்தவ நண்பா் தயங்கியதால் மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து வெளியேறி கமாதி பாக் பூங்காவில் 5 மணி நேரம் கழித்தவிட்டு இரவு 9 மணி ரயிலில் பம்பாய் செல்கிறார். தீண்டாமையின் கொடுமையால் 11 நாட்கள்தான் அவர் பரோடாவில் வேலை பார்க்க முடிந்தது.

“ஒரு டஜன் பார்சிக்கள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புகளுடன் என் முன்னே வரிசையாக நிற்க, மன்னிப்பு கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்ற காட்சி 18 ஆண்டகள் கடந்த பின்பும் சிறிதும் மங்கவில்லை. அதைத் தெளிவாக என் மனக்கண் முன் கொண்டு வர முடியும். ஆனால் கண்ணில் கண்ணீா் இல்லாமல் மட்டும் அதை நினைவு கூற முடியாது. .இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால், அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமையை வேதனையோடு பதிவு செய்கிறார்.

பாரிஸ்டரையும் துரத்தும் தீண்டாமை!
1929 ஆம் ஆண்டு தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, கொடுமை, கொடூரம் குறித்து விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த குழுவில் அம்பேத்கரும் ஒரு உறுப்பினர். விசாரணைக்காக மகர்வாடா ரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சாலிஸ்காவோன் செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் இருந்த டோங்கோவாலாக்கல் யாரும் தீண்டத்தகாதவர்களை வண்டியில் ஏற்றிச் செல்ல தயாரில்லை. எனவே வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்த சாலிஸ்காவோன் தாழ்த்தப்பட்டவர்கள், அனுபவமில்லாத தங்களில் ஒருவரைக் கொண்டு வண்டியை ஓட்ட, அது விபத்துக்குள்ளாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல நாட்கள் நடக்க முடியாமல் இருந்துள்ளார் அம்பேத்கர்.

”ஓர் இந்து டோங்கோவாலா, ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையில் இருந்தாலும், தான் எல்லா தீண்டத்தகாதவர்களையும்விட, ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதை உணர்ந்து கொண்டேன்!” என அம்பேத்கர் தீண்டாமையின் அவலத்தை தோலுரிக்காட்டுகிறார்.
(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

இன்று வடிவம் வேறாக இருந்தாலும் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைகோடி நிலையில் இருக்கும் சாதி இந்துக்கள் தன்னைவிட உயர் பதவியில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமை எண்ணத்துடன்தான் அணுகுகின்றனர்.

“நீயெல்லாம் என்னை கேள்வி கேட்கிறயா?” என பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளே ஆன முதலியார் சாதியைச் சேர்ந்த ஒரு கடைநிலை பெண் ஊழியர், தன்னைவிட உயர் பதவி வகிக்கும் முப்பது ஆண்டுகாலம் பணி அனுபவம் உள்ள பறையர் சாதியைச் சேர்ந்த ஆண் ஊழியர் ஒருவரைப் பார்த்து கேள்வி எழுப்பிய சம்பவம் சமீபத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் நடந்துள்ளது.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

4 comments:

 1. அம்பேத்கரை தீண்டிய தீண்டாமை கொடுங்கோண்மைதான் அன்றும் இன்றும் நிலவி வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. தீண்டாமை கொடுங்கோண்மைக்கு முடிவு கட்ட வேண்டும்.

   Delete
 2. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  ReplyDelete
  Replies
  1. ootru வில் t போட்டு உச்சரிக்கும் போது ஊட்று என்றுதான் உச்சரிப்பு வரும். இது தவறானது. oortru என போட்டால் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

   Delete

There was an error in this gadget